`பவர் ப்ளேவில் 24 டாட் பால்கள்; 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்த எஸ்.ஆர்.ஹெச்!' - பஞ்சாபுக்கு 151 ரன்கள் இலக்கு #KXIPvSRH | IPL 2019: SRH sets 151 runs target to KXIP

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (08/04/2019)

கடைசி தொடர்பு:07:25 (09/04/2019)

`பவர் ப்ளேவில் 24 டாட் பால்கள்; 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்த எஸ்.ஆர்.ஹெச்!' - பஞ்சாபுக்கு 151 ரன்கள் இலக்கு #KXIPvSRH

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது.

வார்னர்

மொஹாலி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ்வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆண்ட்ரூ டை மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோருக்குப் பதிலாக, முஜீப் மற்றும் அங்கித் ராஜ்புத் ஆகியோர் களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களம்கண்டது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை பேரிஸ்டோவ் மற்றும் வார்னர் ஆகியோர் தொடங்கினர். போட்டியின் தொடக்கம் முதலே கிங்ஸ்லெவன் பஞ்சாப் வீரர்கள் நேர்த்தியாகப் பந்துவீசினர். இதனால், ஹைதராபாத் வீரர்கள் ரன்குவிக்கத் தடுமாறினர். இரண்டாவது ஓவரிலேயே பேரிஸ்டோவ் விக்கெட்டைப் பறிகொடுத்த ஹைதராபாத் அணி, பவர் ப்ளே முடிவில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டவாது விக்கெட்டுக்கு கைகோத்த வார்னர் - விஜய் சங்கர் ஜோடி, விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் நோக்கில் மெதுவாக விளையாடியது. இதனால், ஹைதராபாத் அணியின் ரன் வேகம் மெதுவாக நகர்ந்தது. 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கர் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள்

10 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்த அந்த அணி, 15.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. நபி 12 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னருடன் மணீஷ் பாண்டே கைகோத்தார். இந்த ஜோடி வேகமாக ரன்குவிக்கத் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 49 பந்துகளில் அரை சதம் அடித்தார். 4-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தநிலையில், ஷமி வீசிய கடைசி ஓவரில் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அவர், 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்ட தீபக் ஹூடா, 14 ரன்கள் சேர்க்கவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர், 62 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். பவர் ப்ளேவில் 24 பந்துகளை டாட் பாலாக கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வீசியது. அதேநேரம், முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் மட்டுமே சேர்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்த 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களைக் குவித்தது.