பிரியாணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களும்....! - ஃபிட்னெஸைக் கேள்விகேட்கும் வாசிம் அக்ரம் | Wasim Akram accuses Pakistani players of eating biriyani

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (09/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (09/04/2019)

பிரியாணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களும்....! - ஃபிட்னெஸைக் கேள்விகேட்கும் வாசிம் அக்ரம்

``பிரியாணியை வழங்கி வந்தால், சாம்பியன்ஸுக்கு எதிராக போட்டியிட முடியாது''  என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சாடியுள்ளார்.

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்தகுதி எப்போதும் முக்கிய பிரச்னையாகவே இருந்து வருகிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளுமா? வீரர்கள் தங்கள் உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்வார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன் ட்ராஃபி வெற்றிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக் கோப்பை தொடர்களில் தோல்விகளை மட்டுமே அந்த அணி பெற்று வந்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்று தொடரை மிகமோசமாக இழந்தது பாகிஸ்தான் அணி. சொந்த மைதானத்தில் வொயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான்

இந்தத் தோல்விகள் குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில்,``ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வொயிட் வாஷ் ஆனது, அணியை பெரும் அளவில் பாதித்தது'' என்றார். வீரர்களின் உடற்தகுதி குறித்து கவலை தெரிவித்த அவர், ``அந்தப் போட்டியின் தோல்விக்கு வீரர்களின் உடற்தகுதி மற்றும் மோசமான ஃபீல்டிங்கும்தான் காரணம். அணியில் புதிதாக சேர்ந்த அபித் அலி, ஹஸ்னைன் ஆகிய இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணியின் தரத்தை முடிவு செய்ய முடியாது. நாங்கள் ஒருபோதும் பிட்னஸில் சமரசம் செய்துகொள்வதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்

ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவர், ``ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களின் ஃபிட்னெஸ் கவலை அளிக்கிறது. அவர்கள் 100 சதவிகிதம் ஃபிட்னெஸுடன் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், வீரர்களுக்கு பிரியாணி உணவு வகையை அளித்துவரும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர், ``பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இன்றுவரை பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. பிரியாணியை வழங்கி வந்தால், சாம்பியன்ஸுக்கு எதிராக போட்டியிட முடியாது'' என விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாஜ் சாதிக் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ட்விட்

ஃபிட்னெஸ் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக லாகூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் இரண்டு நாள் பயிற்சிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக் குழுவினர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறும் 23 பேர் கொண்ட உத்தேசப் பட்டியை ஏற்கெனவே வெளியிட்டுள்ளனர். உலகக் கோப்பையில் இடம்பெறும் வீரர்கள் இந்தக் கேம்ப்புக்கு அனுப்பப்படுவார்கள். இந்த கேம்ப் ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 18-ம் தேதி உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.