``சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆடி இருக்க வேண்டும்” - தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் | We've tried hard and as a captain I am okay - Dinesh Karthik

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (10/04/2019)

கடைசி தொடர்பு:09:10 (10/04/2019)

``சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆடி இருக்க வேண்டும்” - தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

Photo Credits : iplt20.com

ஐ.பி.எல் தொடரில் மிரட்டி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்தப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரிலே தொடக்க ஆட்டக்காரரான லின்னை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார் தீபக் சஹார். இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன், ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். பவர் ப்ளே முடிவதற்குள் கொல்கத்தாவின் பவரை கட் செய்தது சென்னை அணி. உத்தப்பா, நித்திஷ் ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக் என வரிசையாக நடையைக்கட்டினர்.

சஹார்

Photo Credits : iplt20.com

அபாரமான பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படும் ரஸல் களமிறங்கினார். வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடினார் ரஸல். தானும் விக்கெட்டை இழந்தால் அணியின் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்தே விளையாடினார். இருந்தும் 12 ஓவரில் ரஸல் கொடுத்த கேட்சை ஹர்பஜன் வீணடித்தார். ஒருவழியாக 20 ஓவரை முழுமையாக நிறைவு செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரஸல் 50 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன், இம்ரான் தாஹீர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ரஸல்

Photo Credits : iplt20.com

எளிய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு வாட்சன் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸர் என அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்திய வாட்சன் 3-வது ஓவரில் சுனில் நரேன் பந்துவீச்சில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரெய்னா 14 ரன்களில் வெளியேறினார். டூப்ளிஸிஸ் - அம்பாத்தி ராயுடு இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக டூப்ளிஸிஸ் 43 ரன்களை எடுத்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Photo Credits : iplt20.com

போட்டிக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ``இந்தப் போட்டியில் நாங்கள் எடுத்த ரன்கள் மிகவும் குறைவானதுதான். இது சற்று கடினமான ஆட்டம்தான். இதுபோன்ற ஆடுகளங்களில் எவ்வளவு ரன்கள் போதுமானதாக இருக்கும் எனத் தெரியாது. ஆனால் போட்டி முடிந்த பின்னர் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கத் தோன்றும். பவர்-ப்ளேயின் போது 4 விக்கெட்டுகளை இழந்தோம் அப்போதும் 8 பந்துகளுக்கு பின்னால்தான் இருந்தோம். அந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆடி இருக்க வேண்டும் நாங்கள் அவ்வாறு செய்ய தவறிவிட்டோம். ஆனால் ரஸல் சிறப்பாக விளையாடினார். சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஆடினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Photo Credits : iplt20.com

இலக்கு சிறியதாக இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். எங்கள் தரப்பு பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நான் கூறமாட்டேன். இந்த 5 நாள்களில் தொடர்ச்சியாக 3 போட்டியில் விளையாடியுள்ளோம் அதில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளோம். நாங்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினோம். இந்த நாள் எங்களுக்குக்கான நாளாக அமையவில்லை. இன்றைய நாளை மறப்போம். அடுத்த போட்டி புதிய போட்டியாக இருக்கும். புதிய நாளை நோக்கிப் பயணிப்போம். என்றார்.