`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் | Virat Kohli named Wisden's Leading Cricketer for third consecutive year

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (10/04/2019)

கடைசி தொடர்பு:17:24 (10/04/2019)

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' என்கிற அங்கீகாரத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது இங்கிலாந்தின் விஸ்டன் இதழ். 

விராட் கோலி

Photo Credit: ICC

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மாத இதழான விஸ்டன், கிரிக்கெட்டின் முக்கிய பத்திரிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழ் ஆண்டுதோறும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்று அந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர் ஒருவருக்கு கௌரவம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்தவகையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விராட் கோலிக்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் அந்தஸ்தைக் கொடுத்து விஸ்டன் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதேபோல், டாப் 5 வீரர்கள் வரிசையிலும் அவருக்கு விஸ்டன் இடம் கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் விராட் கோலியுடன் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், சாம் குரான், கவுன்டி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ரோரி பர்ன்ஸ் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணியின் டேமி பேமன்வுண்ட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

விராட் கோலி

Photo Credit: ICC

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 134 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி, கடந்தாண்டு பயணத்தின்போது 593 ரன்கள் குவித்தார். இதுகுறித்து பேசிய விஸ்டன் இதழின் ஆசிரியர் லாரன்ஸ் பூத், `இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தோல்வியடைந்த அணியின் பக்கம் இருந்தாலும், 2014-ம் ஆண்டு பேட்டிங்கில் தடுமாறியதில் இருந்து மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக இங்கிலாந்தில் அவரது டெஸ்ட் பேட்டிங் சிறப்பானதாக இருந்தது. அதேநேரம், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் அடுத்தகட்டத்துக்குச் சென்றது' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். 

ஸ்மிர்தி மந்தனா

Photo Credit: ICC

கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஐசிசியின் சிறந்த வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்தவீரர் விருதுகளை கோலி வென்றிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் மூன்றுவிதமான போட்டிகளையும் சேர்த்து கோலி, 11 சதங்கள் உட்பட 2,735 ரன்கள் குவித்திருந்தார். அவரது சராசரி 67.35 ஆகும். அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனாவை விஸ்டன் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் சிறந்த டி20 வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.