`ராகுல் முதல் சதம், கெய்ல் அதிரடி... பௌலிங்கில் அரைசதம் கண்ட பாண்ட்யா! - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு! #MIvKXIP | IPL 2019: KXIP sets 198 runs target to MI

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/04/2019)

கடைசி தொடர்பு:22:04 (10/04/2019)

`ராகுல் முதல் சதம், கெய்ல் அதிரடி... பௌலிங்கில் அரைசதம் கண்ட பாண்ட்யா! - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு! #MIvKXIP

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.

கே.எல்.ராகுல்

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ரோஹித் ஷர்மா களமிறங்காத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, பொல்லார்ட் தலைமையில் களமிறங்கியது.

மும்பை அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் சித்தேஷ் லாட் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக கருண் நாயரும் முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக ஹார்டுஸ் வில்ஜியோனும் களமிறங்கினர். 

கிறிஸ் கெய்ல்

இதையடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்தில் பொறுமைகாட்டிய இந்த ஜோடி, மெதுவாக  அதிரடி மோடுக்கு பேட்டிங்கை மாற்றியது. பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்த நிலையில், 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். அவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார்.

கிறிஸ் கெய்ல் - கே.எல்.ராகுல்

இதையடுத்து களமிறங்கிய மில்லர், கருண் நாயர் மற்றும் சாம் குர்ரான் ஆகியோர் நீண்டநேரம் நிலைக்கவில்லை. இதனால், பஞ்சாப் அணியின் ரன் ரேட்டும் குறைந்தது. 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய பஞ்சாப் 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் கே.எல்.ராகுல் அதிரடி காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களும் பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்களும் எடுக்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 64 பந்துகளில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.