ஜட்டுவின் `லட்டு’ சிக்ஸ்; தோனியின் சேட்டை -வாவ் `கேமரா மேன்’ | Ravindra Jadeja shot during match

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:31 (12/04/2019)

ஜட்டுவின் `லட்டு’ சிக்ஸ்; தோனியின் சேட்டை -வாவ் `கேமரா மேன்’

ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுற மேட்ச்ல பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. குறைவான டார்க்கெட்டாக இருந்தாலும் வழக்கம்போல 20 ஓவர் வரை கொண்டு போய்தான் வின் பண்றாங்கன்னு தொடர்ந்து விமர்சனம் இருந்தது. ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 150 ப்ளஸ்தான் டார்க்கெட். பவர் ப்ளே முடிவதற்குள் 4 விக்கெட்டுகள் காலி. முதல் ஒவரிலே ரன் கணக்கை தொடங்காமல் வாட்சன் அவுட்டானார். 2வது ஓவரில் ரெய்னா தேவையில்லாத ரன்அவுட். 4-வது ஓவரில் டூப்பெளஸ்ஸிஸ் காலி. 6-வது ஓவரில் கேதர் ஜாதவ் பெவிலியன் திரும்பினார். 24 ரன்களுக்கு 4 விக்கெட். அம்பாதி ராயுடு - தோனி சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்குத் திரும்பியது சி.எஸ்.கே. 18-வது ஓவரில் ராயுடு அவுட்டாக ராஜஸ்தான் பக்கம் மெல்லக் காற்று வீசியது.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கில் ஜடேஜா நிற்கிறார். பென் ஸ்டோக்ஸின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் ஜட்டு. நிலை தடுமாறி ஜடேஜா கீழே விழுந்துவிட்டார். பந்துவீசிய வேகத்தில் பென் ஸ்டோக்ஸும் தரையில் விழுந்துவிட இரண்டு பேரின் கவனமும் பந்தின் மீதே இருந்தது. அதை அற்புதமாகப் படம் பிடித்திருந்தார் கேமரா மேன். அதற்குள் தோனி ரன் எடுக்க வேகமாக ஜடேஜா அருகிலே சென்றுவிட்டார். எழுந்து ஓடு என தோனி கூறும்போது பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்டது. ஜடேஜா தோனியைப் பார்த்து பால் சிக்ஸர் எனக் கூற தோனி விளையாட்டாக ஜட்டுவின் தலையில் பேட்டால் அடிப்பதுபோல் செய்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுக்க. அது நோ பாலாக அமைய ஃப்ரீ ஹிட்டில் தோனி இரண்டு ரன் எடுத்தார்.

பென் ஸ்டோக்ஸ்

Photo: IPLT20.COM

தோனி 3-வது பந்தில் அவுட்டானார். 5-வது பந்தில் நோபால் சர்ச்சை,  ஃபுல் டாஸாக வந்த பந்தில் சான்ட்னர், 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ - பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. மிஸ்டர் கூல் என அழைக்கப்படும் தோனி இதனால் சற்று ஆவேசமானார். நோபால் குறித்து ஜடேஜா களநடுவர்களிடம் பேசிக்கொண்டிருக்க தோனி வேகமாகக் களத்துக்குள் புகுந்தார். சிறு நேர வாக்குவாதத்துக்குப் பிறகு தோனி வெளியே வந்துவிட்டார். கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸர் விளாசி மேட்சை தித்திப்பாக முடித்து வைத்தார். கடைசி ஓவர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்தது.

 

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்......