`சேப்பாக்கம், வான்கடே கோட்டை; ஆனா சின்னசாமி அப்படி இல்லை’ - டிவில்லியர்ஸ் வேதனை | RCB Will learn from Chennai Says ab de villiers

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (12/04/2019)

கடைசி தொடர்பு:14:50 (12/04/2019)

`சேப்பாக்கம், வான்கடே கோட்டை; ஆனா சின்னசாமி அப்படி இல்லை’ - டிவில்லியர்ஸ் வேதனை


டிவில்லியர்ஸ்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யவில்லை. பெங்களூருவின் தோல்விக்கு பல காரணங்களை கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் பேசி வரும் நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் டி வில்லியர்ஸ் எழுதிய கட்டுரை அதற்கான காரணத்தை தெளிவாகக் கூறுகிறது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டி-வில்லியர்ஸ் பெங்களூரு அணியில் சீனியர் வீரராக இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். பெங்களூரு அணியின் மிகப்பெரிய பலமே டி-வில்லியர்ஸும், கேப்டன் கோலியும்தான்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

டிவில்லியர்ஸ் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், ``உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் பெங்களூரு வெற்றிபெறாதது மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது. ஐபிஎல் போன்ற தொடர்களில் வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூரில் நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். அதில் தோற்றதுதான் இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடர்களில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள மும்பை மற்றும் சென்னை அணியினர் உள்ளூர் ஆடுகளத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் அதிகமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். மும்பை அணியில் டாப் க்ளாஸ் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். வான்கடே மைதானத்தில் விளையாடும் போது சரியான திசையில் துல்லியமான வேகத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் உள்ளூர் மைதானத்தில் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர். 2015 ஆண்டிலும் சரி 2017-ம் ஆண்டிலும் சரி வான்கடேவில் நடந்த 7 போட்டிகளில் 5-ல் வெற்றி வாகை சூடினர்.

மும்பை இந்தியன்ஸ்

சென்னை அணி ஐபிஎல் மகுடம் சூடிய போட்டிகளில் அவர்களும் சேப்பாக்கத்தில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருந்தனர். சுழற்பந்துவீச்சுதான் அவர்களது பலமே. இந்த முறை ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் எனச் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளனர். சேப்பாக்கம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம். சென்னை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

விராட் கோலி

நீங்கள் சொந்த மைதானத்தில் உங்கள் ஆதரவாளர்களின் முன்னிலையில் விளையாடும் போது ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ப்ளேயிங் லெவனை மாற்றிக் களமிறக்க முடியும். உங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்காது. சரியாகத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். இந்தக் கட்டுரையின் மூலம் பெங்களூரு அணி சின்னசாமி ஸ்டேடியத்தை தனது கோட்டையாக மாற்ற வேண்டும் என விரும்புகிறார். உள்ளுர் ஆடுகளத்தில் தோல்வியடைவது கடினமாக உள்ளது என்ற அவரது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.