ரஸலின் தொடர்ச்சியான 6வது 40 ப்ளஸ் ஸ்கோர்; மிரட்டல் கில்! - டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு #KKRvDC | kkr scores 178/7 runs against delhi capitals

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:55 (12/04/2019)

ரஸலின் தொடர்ச்சியான 6வது 40 ப்ளஸ் ஸ்கோர்; மிரட்டல் கில்! - டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு #KKRvDC

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

photo credit: @IPL

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 26-வது லீக் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. கிறிஸ் லின், ஹேரி கர்னி மற்றும் சுனில் நரேன் ஆகியோருக்குப் பதிலாக, ஜோ டென்லி, கார்லோஸ் பிராத்வொயிட் மற்றும் பெர்குசன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றமாக, லாமிசேனேவுக்குப் பதிலாக கீமோ பவுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

photo credit: @IPL

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஜோ டென்லி - சுப்மன் கில் ஓப்பனிங் கொடுத்தனர். இதில் அறிமுக வீரராக களமிறங்கிய டென்லி முதல்பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். இஷாந்த் ஷர்மாவின் முதல் பந்திலேயே அவர் போல்டாகினர். முதல் விக்கெட் விரைவாக வீழ்ந்தாலும், அடுத்து சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா ஓரளவுக்கு விளையாடி ரன்கள் சேர்த்தார். பவர் பிளேவில் நன்றாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப்பை கொண்டு சென்றது. உத்தப்பா 28 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ராணா 11 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார். 65 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் கீமோ பால் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

photo credit: @IPL

இதனையடுத்து வந்த ரஸல் இன்றும் வழக்கம் போல சிக்ஸர்களாக விளாசினார். சிறிது நேரம் வாணவேடிக்கை காண்பித்த அவர் அரை சதம் எடுக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேற மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் ரபாடா, மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க