`முடிந்தபோட்டிகளின் முடிவுகளை மாற்ற முடியாது; எங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்!' - சஹால் | Chahal on RCB's 6 stright losses

வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (13/04/2019)

கடைசி தொடர்பு:09:27 (13/04/2019)

`முடிந்தபோட்டிகளின் முடிவுகளை மாற்ற முடியாது; எங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்!' - சஹால்

`முடிந்துபோன போட்டிகளின் முடிவுகளை மாற்ற முடியாது; எதிர்வரும் போட்டிகளில் வெல்வதில்தான் எங்களின் கவனம் இருக்கிறது' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்துவீச்சாளார் யுஷ்வேந்திர சஹால் தெரிவித்திருக்கிறார். 

விராட் கோலி, மொயின் அலியுடன் சாஹல்

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தொடரில் நீடிக்க அடுத்துவரும் போட்டிகளில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அந்த அணி, மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க்கொள்கிறது. 

போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால், `நாங்கள் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற இன்னமும் எங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு இதேபோன்ற சூழலில்தான் நாங்கள் இருந்தோம். அந்தத் தொடரின் இறுதிப் போட்டிவரை நாங்கள் முன்னேறினோம். அந்தத் தொடரின்போது 7 போட்டிகளில் 6ல் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். எங்கள் திறமையை நம்புகிறோம். 

சஹால்

Photo: Twitter/@RCBTweets

பேட்டிங்கையோ பௌலிங்கையோ நான் குறைகூற விரும்பவில்லை. ஒரு அணியாக எங்களது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ஒரு அணியாகக் குழுவாக இணைந்து நாங்கள் விளையாடவில்லை என நினைக்கிறேன். சில நேரங்களில் எங்களது பேட்டிங், சில நேரங்களில் எங்களது பௌலிங் எடுபடவில்லை. இது தனி நபர் விளையாட்டல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு வீரர்களை மட்டுமே நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது. 11 வீரர்களும் அதற்காக முயற்சிக்க வேண்டும். 

கடைசி ஓவர்களில் எங்கள் பந்துவீச்சு மோசமாக இருக்கிறது. அதில் முன்னேற்றம் தேவை. அது ஒரு முக்கியமான பிரச்னை. 16வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாகவே பந்துவீசுகிறோம். அதன் பின்னும் நன்றாக பந்துவீசி முடிக்க வேண்டும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அந்தப் போட்டியில் வென்றால், அது மிகப்பெரும் நம்பிக்கையளிக்கும். முடிந்துபோன போட்டிகளின் முடிவுகளை மாற்றமுடியாது. எதிர்வரும் போட்டிகளில் வெல்வதிலேயே எங்களின் முழுக் கவனமும் இருக்கிறது'' என்றார்.