பிளாக் ஹோல் என்ன பாஸ் பிளாக் ஹோல்... ஆர்சிபியே ஜெய்ச்சிருச்சு ப்ரோ! #KXIPvRCB | RCB wins at last and makes it 1-6

வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (14/04/2019)

கடைசி தொடர்பு:14:06 (14/04/2019)

பிளாக் ஹோல் என்ன பாஸ் பிளாக் ஹோல்... ஆர்சிபியே ஜெய்ச்சிருச்சு ப்ரோ! #KXIPvRCB

சர்பராஸ் கானை பயன்படுத்தியதற்கு, வழக்கம் போல் நியாயப்படுத்தினார் அஷ்வின். அவரது பேட்டிகளைப் பார்ப்பதே தனி சுவாரஸ்யம். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் 11 வரும் என்று கூட LHS= RHS என பேசுவதில் வல்லவர் அஷ்வின்.

பிளாக் ஹோல் என்ன பாஸ் பிளாக் ஹோல்... ஆர்சிபியே  ஜெய்ச்சிருச்சு ப்ரோ!  #KXIPvRCB

போட்டி முடிந்ததும், நேற்று கோலி அவ்வளவு மகிழ்வாக இருந்தார். (இருக்காதா பின்ன, டபுள் பைக்ல ஸ்டாண்டிங்ல வந்தவன பிடிச்சு என்னா அடி). இந்த சீசனில் ஆறு போட்டிகளில்  எல்லாமே தோல்வி. இன்னும் முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால், போன சீசனின் கடைசி போட்டித் தோல்வியுடன் சேர்த்தால், 7 தோல்விகள் . அண்டர் 19 போட்டிகளில் இருந்து கோலி சந்திக்கும் மிகப்பெரும் தோல்வி இதுதான். அதுவும் இந்தியாவின் கேப்டன். இந்தியாவின், இந்திய கிரிக்கெட் மத மக்களின் கனவான உலக கோப்பை இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பிக்க இருக்கும் சூழலில் கோலியின் தோல்விகள் பயம் கொள்ள வைத்தது. இங்கிலாந்தின் மைக்கல் வான் முதல் நம்மூர் கம்பீர் வரை, இதுதான் வாய்ப்பு என கோலியின் மீதிருக்கும் மன அழுக்குகளைக் கொட்டித் தீர்த்தனர். யானை குப்புற விழுந்தால், எறும்பு கொக்கானி காட்டுமாம் என்பது போல், டைம்லைன் முழுக்கவே ஆன்டி கோலியிஸம். ரோஹித் மிகச்சிறந்த கேப்டன் என ரோஹித் ரசிகர்கள் வேறு காக்கா முட்டை சிறுவர்கள் போல், நாய்க்குட்டியுடன் வலம் வர ஆரம்பித்துவிட்டார்கள். 

கோலிஇனி ஐபிஎல் போட்டிகளில் , டாஸ் வென்றால், யார் பேட்டிங் என்றெல்லாம் கேட்க வேண்டியதே இல்லை. நடந்து முடிந்த 28 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே டாஸ் வென்றவுடன் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறார்கள். அதிலும் அப்படி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து வென்ற ஒரே அணி தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வழக்கம் போல், டாஸ் வென்று கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். வழக்கம் போல் அவர் வாஷிங்டன் சுந்தரை இந்தப் போட்டிக்கும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தோற்கும் என நினைத்தால், கோலிவில்லி காம்போ கடைசியாக வெற்றிபெற்றுவிட்டது. ஏபிடி, ஸ்டாய்னிஸ், மொயின் அலி என மூன்று அயல்ஸுடன் களமிறங்கினார் கோலி. பஞ்சாபுக்கு அடித்ததும்  முன்னாள் பெங்களூரு வீரரான கிறிஸ் கெயில் தான் 99*.

' நாகராஜ் அண்ணே, நல்லா இருக்கிங்களா' என பரஸ்பரம் கோலியும் கெயிலும் ஹக் செய்துகொண்டனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே எல்லாம் முடிந்திருக்க வேண்டியது. அட இது எல்பி என டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சிரிக்க, அம்பயர் அவுட் தரவில்லை. அம்பயருக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை என கோலியும் ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால், அது அப்பட்டமான அவுட் என ரீப்ளேக்கள் பல் இளித்தன. உமேஷின் அடுத்த ஓவரில் கெயில் பவுண்டரி, சிக்ஸர் என பீஸ்ட் மோடுக்கு மாறிவிட்டார். அதிலும் சிராஜ் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவர் கொஞ்சம் காஸ்ட்லி. இரண்டு சிக்ஸ் , மூன்று பவுண்டரி என 24 ரன்களை கெயில் பஞ்சாபுக்காக பாக்கெட் செய்தார். ஷார்ட் பால் 'போட்றா தம்பி' என யார் கொடுத்த ஐடியாவோ, கெயில் லெக் சைடில் அடித்த அந்த சிக்ஸ் 94 மீட்டர். 'போ போய் பால எடுத்துட்டு வா' , என்பது போல் அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

பெங்களூரு55,71*,100* என கே.எல்.ராகுல்லா இது என்னும் அளவுக்கு ஐபிஎல்லில் போன சீசனின் அதே வெறியுடன் ஆடிவருகிறார் ராகுல். கெயில் போலவே முதல் பால் சிக்ஸ் அடித்துவிட்டு, அடுத்த பாலுக்கும் வெளியே வர, ஸ்டம்பிங் செய்யப்பட்டு, 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ராகுல். நேற்றைய போட்டியின் இன்னொரு சுவாரஸ்யம், ராகுல், அடுத்து வந்த அகர்வால், அடுத்த வந்த சர்பராஸ் மூவருமே சிக்ஸ் அடித்துவிட்டு, அடுத்த பந்திலேயே அவுட். ராகுலும், அகர்வாலும் ஸ்டம்பிங் என்றால், சர்பராஸ் போல்ட் அவ்வளவு தான் வித்தியாசம். எதற்கு அவ்வளவு அவசரம் என தெரியவில்லை. நன்றாக சென்றுகொண்டிருந்த போட்டிக்கு ஸ்பீட் பிரேக்கர்களாக வந்து அமைந்தது இந்த விக்கெட்டுகள்.

கெயில்தொடர்ச்சியாக சோபிக்கத் தவறியதால், மில்லருக்கு நோ சொன்னதன் விளைவு பஞ்சாபில் தெரிந்தது. மில்லரை சூப்பர் ஃபீல்டராக முடிவு செய்திருக்கிறார் அஷ்வின். ஸ்பிரிட்டாவது ரூலாவது என எல்லா அணிகளும் செய்யும் தில்லாலங்கடி தான் இது. சென்னையின் தீபக் சஹாரை பவர் பிளேவுக்குள் மூன்று ஓவர் பந்து வீச வைத்துவிடுவார் தோனி, பின்பு ஆட்டத்தின் இறுதியில் தான் சஹருக்கான ஸ்பெல் வரும். அது வரையில் ஃபீல்டராக நன்கு பந்துபிடிக்கத் தெரிந்த ஒரு வீரரை தோனி இறக்கினார். இந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் கெயிலுக்குப் பதில் மில்லரை இறக்கி சாதித்துக்கொண்டார் அஷ்வின். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே கெயில் ஒரு பந்தை விழுந்து தடுக்க , ஒட்டுமொத்த அணியும் வந்து கெயிலைப் பாராட்டியது. 39 வயதான கெயிலால் துடிப்பாக ஃபீல்டிங் சிறப்பாக செய்ய முடியாது என்பது தனி.மீண்டும், மில்லருக்குப் பதில் கெயில் வந்தபோதுகூட கெயில் சில பந்துகளை தடுத்தார் . சரி, எல்லாம் அணிகளும் இந்த சாமர்த்தியங்களை ரூல் புக்குக்கு உட்பட்டு செய்கின்றதே என்றால், ஆம், க்ரிக்கெட்டில் ஸ்பிரிட் என்று ஒன்று இல்லை தான். ஜென்டில்மேன் கேம், ஸ்பிரிட், பெப்ஸி என்றெல்லாம் பேசாமல், போட்டியை ரசிப்பதே நல்லது. அவுட்டான ஒரு வீரர், கேப்டன் என்னும் கொம்பினால், மீண்டும் உள்ளே நுழைந்து வாக்குவாதம் செய்வதையே 'கெத்து' என்று தான் கொக்கரிக்கிறோம். பிறகென்ன. சரி, ஆட்டத்துக்கு வருவோம்.

அடுத்த வந்த சாம் கர்ரனும் 1 ரன்னில் அவுட். கெயில் மட்டும் ஒருபக்கம் ஏண்டா சோதிக்கறீங்க என்பது போல் நின்றுகொண்டு இருந்தார். இது ஆவறதில்ல என கெயில் 16வது ஓவருக்குப் பின்னர் அடித்து ஆட, ஆரம்பித்துவிட்டார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வெஸ்ட் இண்டீஸின் பூரான் பேட்டிங் செய்ய வரவே இல்லை. ஆல்ரவுண்டர் சாம் கர்ரானுக்கு முன்பாவது அவர் வந்து இருக்கலாம். ஏனோ அவர் மீது அஷ்வினுக்கு நம்பிக்கை வரவில்லை போல. கோலி ஒரு சுலபமான கேட்சை கோட்டைவிட்டார். என்னதான் 'குளோபல் வார்னிங்' டியூ என்றாலும், இந்த ஐபிஎல் முழுக்கவே பந்து வழுக்குவதும், பிளேயர்கள் வழுக்குவதும், சிறப்பான பீல்டர்களான கோலி, வில்லி எல்லாம் கேட்ச் விடுவதும் ஏற்கும்படி இல்லை. உலகம் மூழுமைக்கும்தானே டியூ இருக்கும். இல்லை, ஐபிஎல் தான் மற்ற சர்வதேச போட்டிகளைக் காட்டிலும் பிரெஷர் தரக்கூடியது என்றால் மகிழ்ச்சி!.

200 ரன்கள் அடித்திருக்க வேண்டிய பஞ்சாப், இறுதியாக 173 ரன்களுக்கு திருப்திபட்டுக்கொண்டது. கெயில் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலியும் , வில்லியும் அடித்து ஆடினால், பெங்களூரு ஒரு போட்டியில் தோற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 173 ரன்களை எளிதாக சேஸ் செய்தது இந்த ஜோடி. ரன்ரேட்டின் தேவைக்கு ஏற்ப விளையாடியது பெங்களுரூ. விக்கெட் பெரிதாக விழாததால், ஆட்டம் இன்னிங்ஸ் முழுக்கவே பெங்களூரு பக்கம் தான் இருந்தது. 16 ஓவர் முடிவில் கோலி அவுட்டான போதும், கோலி நிம்மதியாகவே இருந்திருப்பார். காரணம், அப்போது வில்லி 32 பந்துகளில் 42 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.

வில்லியர்ஸ்கோலி இந்தப் போட்டியில் சிறப்பாக செய்த ஒரு விஷயம், பஞ்சாப் விக்கெட் விழுந்துகொண்டிருந்த போது, சஹல், அலி ஸ்பெல்லை முழுமையாக பயன்படுத்தினார் . 200 செல்லவேண்டிய பஞ்சாபின் ஸ்கோர், குறைந்ததற்கு இது முக்கிய காரணம். பஞ்சாபின் முருகன் அஷ்வின் பந்துவீச்சில் பெங்களூரு பெரிதாக அடிக்கவில்லை. அவரின் எக்கானமி 6. அப்போது லெக்கியான சர்பராஸ் கானை அஷ்வின் பயன்படுத்திருந்தாலும் பரவாயில்லை. கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவை என்கிற போது, சாம் கர்ரானுக்குப் பதிலாக கானை வைத்து ட்விஸ்ட் கொடுத்தார் அஷ்வின். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் 2 என ஆட்டம் இனிதாக முடிந்தது.

சர்பராஸ் கானை பயன்படுத்தியதை வழக்கம் போல் நியாயப்படுத்தினார் அஷ்வின். அஷ்வின் பேட்டிகளைப் பார்ப்பதே தனி சுவாரஸ்யம். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் 11 வரும் என்று கூட LHS= RHS என பேசுவதில் வல்லவர் அஷ்வின்.

9.30 மணிக்கு முடிய வேண்டிய போட்டியை 9.50 வரை நீட்டி முழக்கினார் ஆங்ரி பேர்டு கோலி. அபராதமும் வாங்கிவிட்டார். ரோஹித், ரஹானேவைத் தொடர்ந்து கோலி அபராதம் வாங்கி இருக்கிறார். 


அடுத்த போட்டியில் பெங்களூருவுக்கு டேல் ஸ்டெய்ன் இருப்பார் என நம்பலாம். இனி அடுத்தடுத்த போட்டிகளை பெங்களூரு வெல்ல வேண்டும். ஆனால், அடுத்த போட்டி மும்பையுடன். அதுவும் வான்கடேவில்!.


டிரெண்டிங் @ விகடன்