``தோனிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதித்திருக்க வேண்டும்!” - காரணம் சொல்லும் சேவாக் | sehwag speaks about dhoni's action in chennai Rajastan match

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/04/2019)

கடைசி தொடர்பு:15:10 (14/04/2019)

``தோனிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதித்திருக்க வேண்டும்!” - காரணம் சொல்லும் சேவாக்

 

தோனி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி நோ பால் சர்ச்சையின்போது மைதானத்துக்குள் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்திருந்தது. 

இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பில்,   ``சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தவற்றை அவர் முதன்முறையாகச் செய்ததால், அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது. 

ஐ.பி.எல் நிர்வாகத்தின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தோனி செய்த தவறுக்கு தண்டனை கொடுத்து விட்டீர்கள். களத்தில் இருந்த நடுவருக்கு என்ன தண்டனை எனக் கேள்வி எழுப்பினர். 

தோனி

இந்த விவகாரம் இன்று வரை விவாதப் பொருளாக உள்ளது. இது தொடர்பாக தனியார் கிரிக்கெட் ஊடகத்துக்குப் பேசிய இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக்,  ``தோனி மைதானத்துக்குள் வந்திருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து. களத்தில் இரு பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் நடந்த குழப்பம் தொடர்பாகப் பேசி வருகின்றனர். அதை அவர் அப்படியே விட்டிருக்கலாம். தோனியின் இந்த நடவடிக்கை மற்ற கேப்டன்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால், தோனிக்கு ஒருபோட்டி அல்லது 2 போட்டிகள் வரை தடை விதித்திருக்க வேண்டும் என்பேன். அப்போதுதான் களத்தில் இருக்கும் நடுவர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும்.
 

சேவாக்

அவர் இந்திய அணிக்காக இதைச் செய்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். சென்னை அணிக்காக அவர் அதிக எமோஷனல் ஆகிறார். இந்திய அணிக்காக விளையாடும்போதெல்லாம் அவர் கூலாகதான் இருக்கிறார்” என்றார். 
சரி, இந்தச் சூழலில் தோனி என்னதான் செய்திருக்க வேண்டும் என் கேள்விக்கு,  ``தவறுகள் நடக்கும். அது இயல்பானது. அப்போது ஒரு கேப்டன் களத்துக்குள் வந்து நடுவர்களைக் கேள்வி கேட்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நடுவர்களின் மதிப்பைக் குறைத்துவிடும். தோனி களத்துக்குள் வந்ததை விட வாக்கி டாக்கி மூலம் நான்காம் நடுவரிடம் இதனை முறையிட்டிருக்கலாம். அதுதான் சரியானதாக இருக்கும்” என்றார்.