ரெய்னாவின் முதல் அரைசதம்; ஜடேஜாவின் `செம்ம கேமியோ'!- 6 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தாவில் சி.எஸ்.கே வெற்றி #KKRvCSK | IPL 2019: CSK wins by 5 wickets against KKR

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (16/04/2019)

ரெய்னாவின் முதல் அரைசதம்; ஜடேஜாவின் `செம்ம கேமியோ'!- 6 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தாவில் சி.எஸ்.கே வெற்றி #KKRvCSK

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ரெய்னா

கொல்கத்தா ஈடர்ன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் அதிரடி கைகொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்  இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. ஒருகட்டத்தில் 180 ரன்களுக்கு மேல் அந்த அணி குவிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ரன் குவிப்பு மந்தமானது. அந்த அணி கடைசி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அசத்தலாகப் பந்துவீசிய இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  

தாஹிர்

162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்த நிலையில், கர்னி பந்துவீச்சில் 6 ரன்களுடன் வாட்சன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய டூப்ளசிஸ், நரேன் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. பியுஷ் சாவ்லா வீசிய 7வது ஓவரின் முதல் ராயுடு, 5 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த ஜாதவ் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த அவர், சாவ்லா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரெய்னாவுடன் 5வது விக்கெட்டுக்கு கேப்டன் தோனி கைகோத்தார்.

தோனி - ரெய்னா

இந்த ஜோடி 40 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் பிரிந்தது. அவர் வீசிய 16-வது ஓவரின் 4-வது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். கள நடுவரின் முடிவுக்கு எதிராக டி.ஆர்.எஸ்ஸைப் பயன்படுத்திய சி.எஸ்.கே. அதையும் இழந்தது. அப்போது சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 26 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற நிலை. சுனில் நரேன் வீசிய அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன்னை மட்டுமே சென்னை அணி எடுத்தது. 

ஜடேஜா

இந்தச் சூழலில் ரெய்னாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா, இந்த சீசனின் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் இதை அவர் எட்டினார். பிரஷித் கிருஷ்ணா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 9 ரன்கள் கிடைக்கவே, கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சுனில் நரேன் வீசிய 18-வது ஓவரில் சென்னை அணி 8 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் 24 என்ற பரபரப்பான சூழலுக்குப் போட்டி சென்றது. குர்னி வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா அடித்த ஹாட்ரிக் பவுண்டரி உள்பட 16 ரன்கள் கிடைத்தது.  இதனால்,கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது கடைசி ஓவரை பியுஷ் சாவ்லா வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்து சி.எஸ்.கே ரசிகர்களின் பி.பியைக் குறைத்தார் ஜடேஜா. 5 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில், 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை அணி, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களுடனும் ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் நரேன், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.