கங்குலிதான் `பெஸ்ட்’, தோனி, கோலி `நெக்ஸ்ட்’ - சிறந்த கேப்டன் குறித்து சேவாக்கின் விளக்கம் | sehwag talks about india's best captain

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:11:20 (16/04/2019)

 கங்குலிதான் `பெஸ்ட்’, தோனி, கோலி `நெக்ஸ்ட்’ - சிறந்த கேப்டன் குறித்து சேவாக்கின் விளக்கம்

``இந்திய அணியை வழிநடத்தியவர்களில் கங்குலி சிறந்தவர்” என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்திருக்கிறார். 

கங்குலி - தோனி

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். இதில் பல கடவுள்கள். சிலருக்கு சச்சின், சிலருக்கு கங்குலி, சிலருக்கு தோனி, கோலி என பட்டியல் நீளுகிறது. இந்திய அணியைக் கட்டமைத்ததில் கங்குலி மற்றும் தோனிக்கு பெரிய பங்கு இருக்கிறது. இந்திய அணிக்காக ஒரு கேப்டனாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தவர் தோனி. இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி வெற்றிவாகை சூட முக்கிய காரணமாக இருந்தார். 

தாதா கங்குலியும் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 2000-வது ஆண்டில் இந்திய கேப்டனாக இருந்த அசாருதீன் மீது மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு வர கேப்டன் பதவி கங்குலியிடம் வந்தது. கங்குலி இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி வாகை சூட கங்குலி முக்கிய காரணமாக இருந்தார். 

கங்குலி

இந்த இரு ஜாம்பவான்களின் ரசிகர்கள் அவ்வப்போது யார் சிறந்த கேப்டன் என்று மோதிக்கொள்வர். இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக், ``என்னைப் பொறுத்தவரை தோனி மற்றும் கோலியைவிட சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்பேன். ஓர் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோது, கேப்டனுக்குத்தான் முழுப் பொறுப்பும். கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாகும்போது அணியில் அனுபவமில்லாத வீரர்கள்தான் இருந்தனர். நிலையில்லாத இந்திய அணியை அவர் கட்டமைத்தார்” என்றார். 

சேவாக்

வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் போட்டி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சேவாக்,  ``நாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் அது ஒரு போருக்குச் சமமானது. அந்தப் போரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும்” என்றார்.