`அன்று எனக்கு நிகழ்ந்தது இன்று அம்பதி ராயுடுவுக்கு...!' - உலகக்கோப்பை அணிகுறித்து கம்பீர் வருத்தம் | I feel sorry for ambati rayudu as I was in a similar position in 2007 says gambhir

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (16/04/2019)

கடைசி தொடர்பு:20:28 (16/04/2019)

`அன்று எனக்கு நிகழ்ந்தது இன்று அம்பதி ராயுடுவுக்கு...!' - உலகக்கோப்பை அணிகுறித்து கம்பீர் வருத்தம்

'2007ல் எனக்கு நிகழ்ந்தது, இன்று அம்பதி ராயுடுவுக்கு நிகழ்ந்துள்ளது' என உலகக்கோப்பை அணித் தேர்வுகுறித்து முன்னாள் இந்திய அணி வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர்

உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்குத் தேர்வாகவில்லை. அவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இது சர்ச்சையாக மாறியுள்ளது. ``விக்கெட் கீப்பிங் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதன் பின்னும் சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையே, அம்பதி ராயுடுவை அணியில் சேர்க்காததுகுறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பேசியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்

அதில், ``என்னைப் பொறுத்தவரை ரிசப் பன்ட் தேர்வுசெய்யப்படாதது குறித்து எந்த விவாதமும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். பன்ட்டை பொறுத்தவரை அவருக்கு இதில் எந்தப் பின்னடைவும் இருக்காது. ஒருநாள் போட்டிகளில், அவருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் அவர் சீராக விளையாடவில்லை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. தொடர்ந்து அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது. இவரைவிட தினேஷ் கார்த்திக் நன்றாக கீப்பிங் செய்துவருகிறார். கூடவே, நல்ல ஃபினிஷரும்கூட. அதனால், பன்ட்டுக்குப் பதிலாக கார்த்திக்கை தேர்வுசெய்துள்ளனர். இதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றே தோணுகிறது.

அம்பதி ராயுடு

அதேநேரம், அம்பதி ராயுடு விவகாரத்தில் மேலும் விவாதம் செய்ய வேண்டும் எனக் கூறுவேன். ஒருநாள் போட்டிகளில் 48 சராசரி வைத்திருந்தும், 33 வயதாகியும் தேர்வுசெய்யப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம்தான். இந்தச் செய்தி எனக்கு இதயத்தை நொறுக்குவதுபோல அமைந்தது. அம்பதி ராயுடுவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதே நிலை 2007ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது எனக்கு நிகழ்ந்தது. 

கம்பீர்

2007ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு என்னைத் தேர்வுசெய்யவில்லை. உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். நன்றாக விளையாடியும் அணியில் எடுக்கவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய வலியைத் தரும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தற்போதைய நிலையில், அணியில் மற்ற வீரர்களைவிட ராயுடு மீதுதான் அதிக அனுதாபம்வருகிறது" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க