தோனி போஸ்டர்கள், சி.எஸ்.கே கொடிகளுக்குத் தடை?! - சர்ச்சையில் ஹைதராபாத் #SRHvCSK | CSK fans not allowed to take dhoni posters, flags inside Hyderabad ground

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (17/04/2019)

கடைசி தொடர்பு:19:33 (17/04/2019)

தோனி போஸ்டர்கள், சி.எஸ்.கே கொடிகளுக்குத் தடை?! - சர்ச்சையில் ஹைதராபாத் #SRHvCSK

சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டி, ஹைதராபாத் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. 

ட்வீட்

ஐபிஎல் தொடர் முக்கிய கட்டத்தை நோக்கி நெருங்கிவருகிறது. புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் 7ல் வென்று சென்னை அணி முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கோலி தலைமையிலான பெங்களூரு அணி, 8 போட்டிகளில் 7ல் தோல்வியடைந்திருப்பதால், அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது என்றே கூறலாம். 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் போட்டியில், வில்லியம்ஸன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள ஹைதராபாத், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது. 

சி.எஸ்.கே

போட்டியை ஒட்டி மாலை 4 மணி முதலே இரு அணிகளின் ரசிகர்களும்  மைதானத்தில் குவிந்துவருகின்றனர். ஹைதராபாத்தின் மையப்பகுதியான உப்பல் பகுதியில் அமைந்துள்ள மைதானத்துக்குள் தோனி போஸ்டர்கள், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற கொடிகளுடன் செல்ல முயன்ற சி.எஸ்.கே ரசிகர்களுக்கு, மைதான வாயிலில் காவலர்கள் அதிர்ச்சி கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தோனி போஸ்டர்கள் மற்றும் சி.எஸ்.கே கொடிகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சி.எஸ்.கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகப் பார்க்கப்படும் சி.எஸ்.கே -வுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகம். நாட்டின் எந்த மைதானத்தில் சி.எஸ்.கே போட்டி நடந்தாலும், அங்கு சி.எஸ்.கே-வின் ரசிகர்களான விசில்போடு ஆர்மியினருடன் லோக்கல் ரசிகர்களும் மஞ்சள் நிற கொடிகளுடன் ஆஜராகிவிடுவர். 

சி.எஸ்.கே ட்வீட்

இந்த நிலையில், ஹைதராபாத் மைதானத்தில் இன்றைய போட்டியை ஒட்டி நடக்கும் நிகழ்ச்சிகள், சி.எஸ்.கே ரசிகர்களை கோபமடையச் செய்திருக்கிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிடவே, `நண்பர்களே கொஞ்சமாவது #Yellove காட்டுங்கள்' என்று சன்ரைசர்ஸ் அணியின் அதிகாரபூர்வ பக்கத்தை டேக் செய்து சி.எஸ்.கே பதிவிட்டிருக்கிறது. மேலும், இதுகுறித்து சி.எஸ்.கே-வின் சூப்பர் ஃபேன் என்று அறியப்படும் சரவணன் ஹரி இட்டுள்ள பதிவில், `ஐபிஎல் தொடரை நடத்தும் ஐ.எம்.ஜி நிறுவன அறிவுறுத்தலின்படி, ஹைதராபாத் மைதானத்துக்குள் சி.எஸ்.கே கொடிக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அதேநேரம், எஸ்.ஆர்.ஹெச் அணியின் கொடிகள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக நான் வீடியோ எடுத்தவுடன், எனக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், பெரும்பாலான ரசிகர்கள் தோனி போஸ்டர்கள் மற்றும் சி.எஸ்.கே கொடிகளை வாசலில் விட்டுச்செல்கிறார்கள். மற்ற வாயில்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. நான் சென்ற 8-வது கேட்டில் இந்த நிலை. எனக்கு முன் சென்ற நிறைய ரசிகர்கள், சி.எஸ்.கே. கொடி, மஞ்சள் நிற தொப்பி உள்ளிட்டவைகளை விட்டுச்சென்றுள்ளனர்' என்று பதிவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.