``அவரது ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது!” - ராயுடு ட்வீட் குறித்து பிசிசிஐ அதிகாரி | BCCI about rayudu's tweet

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (18/04/2019)

கடைசி தொடர்பு:17:55 (18/04/2019)

``அவரது ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது!” - ராயுடு ட்வீட் குறித்து பிசிசிஐ அதிகாரி

தேர்வுக்குழு தலைவரின் கருத்தைக் கிண்டல் செய்யும் விதமாகக் கருத்து தெரிவித்திருந்த ராயுடு மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.  

ராயுடு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. கிரிக்கெட்டில் டாப் 10 அணிகள் மோதும் இந்தத் தொடருக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இந்திய அணி அறிவித்த நாள் முதல் பல்வேறு கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. ராயுடு தேர்வாகாதது குறித்துப் பல கட்டங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தேர்வுக்குழுத் தலைவர் பேசும்போது,  ``விஜய் சங்கர் சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டிங், பீல்டிங், பௌலிங் என மூன்று டைமன்சன்களிலும் (3டி) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதனாலேயே ராயுவுடுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்தோம்” என விளக்கம் அளித்தார். 

ராயுடு

இந்த நிலையில் ராயுடு ட்விட்டரில் தேர்வுக்குழுத் தலைவரின் கருத்தைக் கலாய்க்கும் விதமாக,  ``உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்’’ எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட், விவாதத்தில் இன்னும் சூட்டைக் கிளப்பியது. 

பிசிசிஐ

இந்த நிலையில், ராயுடுவின் இந்த செயல்பாட்டுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவந்தது. இது தொடர்பாகப் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர்,  ``ராயுடுவின் ட்வீட்டை கவனித்தோம். ஏமாற்றங்களால் வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வதுக்கு சில காலம் ஆகும். அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு அபராதமோ தண்டனையோ தேவையில்லை. அவர் எங்களின் சாய்ஸில் உள்ள வீரர்தான். உலகக்கோப்பை தொடரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர் அணிக்குத் திரும்ப வேண்டி வரலாம்” என்றார்.