"டெத் ஓவர்களில் நான் அங்கு ஃபீல்டிங் நிற்பது ஏன் என தோனிக்கு தெரியும்!" - கோலி பகிரும் ரகசியம் | he gave me an opportunity to bat at No.3 - kohli speaks about dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (19/04/2019)

கடைசி தொடர்பு:18:56 (19/04/2019)

"டெத் ஓவர்களில் நான் அங்கு ஃபீல்டிங் நிற்பது ஏன் என தோனிக்கு தெரியும்!" - கோலி பகிரும் ரகசியம்

மகேந்திர சிங் தோனி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கோலி

உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 40 நாள்களே உள்ளன. சர்ச்சைகளைத் தாண்டி இதில் பங்கேற்கும் வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின் இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர். இதற்கிடையே இந்தியக் கேப்டன் விராட் கோலி இந்தியா டுடே இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ள அவர் தோனி குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார். ``எனக்கும் தோனிக்கும் இடையில் ஒரு புரிதல், நம்பிக்கை உள்ளது. எனக்குத் தெரிந்தவரை தோனி ஒருவர்தான் ஆட்டம் எப்படிச் செல்கிறது என்பதை முதல் பந்து முதல் 300 வது பந்து வரை கணித்து வருகிறார். அவரின் இந்தத் தன்மை எனக்கு உதவுகிறது. தோனி ஸ்டெம்புக்குப் பின்னால் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்தான். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அன்றைய ஆட்டம் குறித்து தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் விவாதிப்பேன். 

விராட் கோலி

அதேபோன்று டெத் ஓவர்களில் அவுட் பீல்டிலிருந்து அணிக்கு எதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என நினைப்பேன். அவுட் பீல்டிலிருந்து அணிக்கு உதவ முடியும் என நம்புவேன். இதனால் இது என் வழக்கமாக மாறிவிட்டது. அதற்காக 35 ஓவர்களுக்கு மேல் நான் பௌண்டரி லைன் அருகே சென்றுவிடுவேன். இது தோனிக்கு நன்றாகத் தெரியும். அந்த நேரத்தில் எனது பணிகளை வேறு யாராவது கவனிக்க வேண்டும். அந்த நேரத்தில் தோனி அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்வார். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. இந்தப் புரிதல் அந்த நேரத்தில் அதிகமாகப் பயன்படும். ஆனால் இதுகுறித்து தோனியை சிலர் விமர்சிப்பது மோசமான ஒன்று.

தோனி - கோலி

எனக்கு, விசுவாசம் என்பது மிக முக்கியமானது. விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும். எனக்கான வாய்ப்புகளை நான் சரியாகப் பெற்றிருந்தாலும் அதற்கு முக்கியக் காரணம் தோனி மட்டுமே. ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அவர் நிறைய உதவியுள்ளார். நிறைய வீரர்களுக்கு மூன்றாவது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. ஆனால் மூன்றாவது இடத்தில் நான் களமிறங்குவதற்கு அவர்தான் உதவிகரமாக இருந்தார்" எனப் பேசியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க