`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... பிசிசிஐ மீதான புது சர்ச்சையும்..! | Curious case of some Hyderabadi cricketers... says Pragyan Ojha

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (19/04/2019)

`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... பிசிசிஐ மீதான புது சர்ச்சையும்..!

பிசிசிஐ மீது இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரக்யான் ஓஜா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அம்பதி ராயுடு

உலகக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது முதல் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இதற்குக் காரணம்  ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்குத் தேர்வுசெய்யப்படாததுதான். கடந்த சில மாதங்களாக உலகக்கோப்பை ரேஸில் அடிபட்ட பெயர்கள், இவர்கள் இருவரும்தான். ஆனால் இவர்கள் தேர்வுசெய்யப்படாமல், அவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தேர்வுசெய்யப்பட்டனர். இது சர்ச்சையாக மாறியுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஆதரவு, எதிர்ப்பு என முன்னாள் வீரர்கள் காரசார விவாதத்தை முன்வைத்துவருகின்றனர்.

பிசிசிஐ

ஆனால் தேர்வுக்குழுவோ, ``விக்கெட் கீப்பிங் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், அவர் சரியாக விளையாடவில்லை. அதேநேரம், விஜய் சங்கர் சிறப்பாக விளையாடிவருகிறார். பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என மூன்று டைமென்ஷன்களிலும் (3டி) சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அதனாலேயே, ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வுசெய்தோம்" என்று விளக்கம் அளித்துள்ளது. இதன் பின்னும் இந்த விவகாரம் குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஓஜா

அணியில் தேர்வுசெய்யப்படாதது குறித்துப் பேசிய அம்பதி ராயுடுவோ, ``உலகக்கோப்பைப் போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனத் தேர்வுக் குழுவின் விளக்கத்தைக் கிண்டல்செய்துள்ளார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இந்திய அணி வீரர் பிரக்யான் ஓஜா தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயுடுவின் ட்வீட்டை டேக் செய்து, ``ஹைதராபாத் கிரிக்கெட்டர்களின் நிலை எப்போதும் இதுதான். இதே நிலையில் நானும் இருந்துள்ளேன். உங்களின் வேதனை எனக்குப் புரியும்" என ஹைதராபாத் கிரிக்கெட்டர்கள்மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

ஓஜா

இவர் பதிவிட்ட உடனே, அவருக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஓஜா-வின் பதிவுக்குக் கீழே சிலர் அவரை வசைபாடத் தொடங்கினர். ``ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுக்கு, அவர் பௌலிங் ஆக்ஷன் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இதில் எங்கிருந்து பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது" என ஒருவர் கேள்வி எழுப்ப, இதற்குப் பதிலளித்த ஓஜா, ``நீங்கள் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? பௌலிங் ஆக்ஷன் சர்ச்சை சம்பவத்துக்குப் பின், எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். முட்டாள்தன தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்" எனக் கடுமையாகக் கூறியிருந்தார். பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என ஓஜா கூறியிருப்பது, இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும் வரை இந்த சர்ச்சை ஓயப்போவது கிடையாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை