6 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்! | Steven Smith returns to lead the Royals' playoff campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (20/04/2019)

கடைசி தொடர்பு:16:07 (20/04/2019)

6 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் 20 ஆட்டங்கள் மட்டும் உள்ளதால் ஒவ்வோர் அணியும் ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன் ராஜஸ்தான் அணி நிர்வாகம் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. இதுவரை கேப்டனாகச் செயல்பட்டு வந்த அஜிங்கியா ரஹானேவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம். அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஹானே

ஒருவருட தடையில் இருந்த ஸ்மித் தடை முடிந்த பின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். எப்பவும் ஓப்பனிங் இறங்கும் ரஹானே பஞ்சாப் உடனான போட்டியில் திரிபாதியை ஓப்பனிங் இறக்கினார். கூடவே ரஹானே நான்காவது வீரராக களமிறங்கி 21 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெற்றிபெற வேண்டிய அந்த மேட்ச்சில் ரஹானேவின் நடவடிக்கையால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், ``ரஹானே சிறப்பாக அணியை வழிநடத்திக் கடந்த வருடம் பிளே ஆப் சுற்று வரை கொண்டு சென்றார். இருப்பினும் அணியின் உரிமையாளர் இந்த சீசனில் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதற்காக புதிய மாற்றம் தேவை என நினைக்கிறார். ஸ்மித் ஏற்கெனவே கேப்டனாக வழிநடத்தி இருப்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் ரஹானே முக்கியப் பங்களிப்பார். புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்காக இந்தச் சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்

ராஜஸ்தான் அணியின் இயக்குநர் ஜூபின் பேசுகையில், ``ரஹானே அணிக்காக எப்போதும் உண்மையாக இருந்து வருகிறார். கடந்த சீசனில் மிக இக்கட்டான சூழ்நிலையில் அணியை பிளே ஆப் சுற்றுக்குக் கொண்டு சென்றார். அவர் எப்போதும் அணிக்கு முக்கியப் பங்களிப்பு கொடுக்கக் கூடியவர்" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டும் அந்த அணிக்கு உள்ளது. இதில் அனைத்திலும் வென்றாலும் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதே வேளையில் மே 1ம் தேதிக்குப் பிறகு ஸ்மித் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ளார். அதுவரை வெறும் 5 போட்டிகளுக்காக ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க