`வெள்ளை வேட்டி; இரண்டு கைகளிலும் சிலம்பம்!' - மெர்சல் காட்டும் `புலவர்' ஹர்பஜன் மாம்ஸ் | CSK spinner Harbhajan singh's viral video

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (20/04/2019)

கடைசி தொடர்பு:18:07 (20/04/2019)

`வெள்ளை வேட்டி; இரண்டு கைகளிலும் சிலம்பம்!' - மெர்சல் காட்டும் `புலவர்' ஹர்பஜன் மாம்ஸ்

சி.எஸ்.கே. வீரர் ஹர்பஜன் சிங், வெள்ளை வேட்டியில் தனது இரண்டு கைகளாலும் சிலம்பம் சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. 

ஹர்பஜன் சிங்

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கான அணிகளை இறுதி செய்யும் போட்டிகள் வரிசைகட்டத் தொடங்கியிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற சென்னை அணி ஒரு போட்டியில் வென்றால் போதும் என்ற நிலை இருக்கிறது. 

சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர் ஹர்பஜன், சென்னை அணிக்கு கடந்த சீசனில் தேர்வானார். அவர் தேர்வாவதற்கு முன்பிருந்தே தமிழில் ட்வீட்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து தமிழில் கவிதை, சினிமாப் படல் என ரெபஃரென்ஸுகளுடன் பதிவிடும் ஹர்பஜனை சென்னை ரசிகர்கள் `புலவர் ஹர்பஜன்' என்ற அடைமொழியுடன் அழைத்து வருகிறார்கள். தமிழர் கலாசாரம், பண்பாடு தொடர்பாகத் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஹர்பஜனின் சமீபத்திய செயல்பாடு அவரை வைரல் நாயகனாக்கியிருக்கிறது. 

தோனியுடன் ஹர்பஜன்

வெள்ளை வேட்டி சகிதம் இரண்டு கைகளிலும் சிலம்பம் எடுத்து ஹர்பஜன் சிங் சுற்றும் வீடியோவை சி.எஸ்.கே, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. தேர்ந்த வீரரைப் போல் ஹர்பஜன் சிலம்பம் சுற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ``பாஜூபாவின் `சிங்கத் தமிழன்' , `தங்கத் தமிழன்' மொமன்ட்' என்ற கமென்டுடன் சி.எஸ்.கே பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களின் கவனம் ஈர்த்துள்ளது.