கேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0! #RRvMI | Captain Change Makes game Change... It's Steve smith 2.0!#RRVsMI

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (21/04/2019)

கடைசி தொடர்பு:11:02 (21/04/2019)

கேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0! #RRvMI

ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் என்னும் இளம் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித், பராக் இருவரும் நிதானமாக அதே சமயம் பவுண்டரிக்கு அடிக்கவேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு அடித்து அருமையான ஆட்டம் ஆடினர்.

கேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0! #RRvMI

2018 ஐ.பி.எல் சீசனில் பாதியில் ஜோஸ் பட்லரை ஓப்பனராகக் கொண்டுவந்து `மாற்றம் முன்னேற்றம்’ கண்டது ராஜஸ்தான். அதேபோல, இப்போது பாதி சீசனைக் கடந்தபின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவுக்கு பதில் ஸ்டீவன் ஸ்மித்தைக் கொண்டுவந்திருக்கிறது. கேப்டன் ஆன முதல் போட்டியிலேயே கேப்டன் இன்னிங்ஸ் ஆடி ராஜஸ்தானுக்கு வெற்றியைத் தந்திருக்கிறார் ஸ்மித்! #RRvMI

டாஸ்!
டாஸ் வென்ற ஸ்டீவன் ஸ்மித் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணியில் பல மாற்றங்கள். குழந்தை பிறந்திருப்பதால் இங்கிலாந்துக்குப் பறந்திருக்கும் ஜோஸ் பட்லருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வந்தார். இஷ் சோதி, ராகுல் திரிபாதிக்கு பதிலாக கேப்டன் ஸ்மித் மற்றும் ரியான் பராக் அணிக்குள் வந்தனர். மும்பை அணியில் ஒரு மாற்றம் மட்டுமே. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் மயாங்க் மார்க்கண்டே. 

ஸ்டூவர்ட் பின்னியுடன் பெளலிங்கைத் தொடங்கியது ராஜஸ்தான். முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பின்னி. இந்த சீஸனில் லெக் ஸ்பின் பெளலிங்குக்கு ரோஹித் ஷர்மா  திணறுவதால் மூன்றாவது ஓவரிலேயே ஷ்ரேயாஸ் கோபாலை கொண்டுவந்தார் ஸ்மித். இந்த பெளலிங் மாற்றத்துக்கு உடனே பலன் கிடைத்தது. மூன்றாவது பந்திலேயே ரோஹித் ஷர்மாவை அவுட் ஆக்கினார் கோபால். ஆனால், அடுத்த ஓவரில் பவுண்டரிகளும், சிக்ஸரும் பறந்தது. குல்கர்னி வீசிய நான்காவது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அதற்கு அடுத்து ஒரு சிக்ஸர் என தெறிக்கவிட்டார் குவின்ட்டன் டி காக். பவர் பிளேவின் முடிவில் 46 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது மும்பை. பவர் பிளேவில் வெறும் 7 ரன்களுக்கு மேல்தான் ரன்ரேட் இருந்தது என்பதால் உற்சாகமானது ராஜஸ்தான்.

#RRvMI

டி காக் மட்டும் ஒருபக்கம் மோசமான பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டியதால் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். 14-வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட். 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார் யாதவ். அடுத்த ஓவரே கோபால் பந்துவீச்சில் டிகாக் அவுட்.  47 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்தார் டிகாக்.  15 ஓவர்களின் முடிவில் 112 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை. டெத் ஓவர்களில் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஓரளவுக்குத்தான் நிறைவேறியது.

கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள் என்கிற வகையில் 49 ரன்களே சேர்த்தது மும்பை. இத்தனைக்கும் பொலார்டும், ஹர்திக் பாண்டியாவும் களத்தில் இருந்தே ஜோஃப்ரா ஆர்ச்சரின் 16-வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. ஒரு ஓவருக்கு 8 ரன்கள் அடித்தால்போதும் என்கிற ரன்ரேட்டுடன் களத்துக்கு வந்தது ராஜஸ்தான்.

நிதானம் காட்டிய கேப்டன் ஸ்மித்!
ஜாஸ் பட்லர் இல்லாததால் ரஹானேவுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார் சஞ்சு சாம்சன். பும்ரா, மலிங்கா என பெளலிங்கைத் தொடங்காமல் ஹர்திக் பாண்டியா அடுத்த ஓவர்  ஸ்பின்னர் க்ருனால் பாண்டியா எனத் தொடங்கினார் ரோஹித் ஷர்மா. மூன்றாவது ஓவர் மலிங்கா, நான்காவது ஓவர் சாஹர் என பெளலர்கள் மாறிக்கொண்டேயிருந்தார்கள். இந்த ஸ்ட்ராட்டஜிக்குப் பலனும் கிடைத்தது. நான்காவது ஓவரில் ரஹானே அவுட்.  12 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்தார் ரஹானே. ஐந்தாவது ஓவரில் மீண்டும் மாற்றம். பும்ரா வீசினார். பவர் ப்ளேவின் இறுதி ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் சஞ்சு சாம்சன். இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் என ரன்ரேட் 10-ல் இருந்தது ராஜஸ்தான். 

#RRvMI

ஏழாவது ஓவரில் மீண்டும் ஒரு மாற்றமாக மார்க்கண்டேவை அறிமுகப்படுத்தினார் ரோஹித். ஆனால், இந்த ஓவரில் ஸ்மித் ஒரு சிக்ஸர், சாம்சன் ஒரு சிக்ஸர். நல்ல ஸ்டார்ட்டுடன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சாம்சன் அடுத்த ஓவரில் அவுட். சஹாரின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் 35 ரன்களுக்கு அவுட் ஆனார் சாம்சன். இதே ஓவரில் வந்த வேகத்தில் பெவிலியன் போனார் பென் ஸ்டோக்ஸ். டக் அவுட். 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான். அடுத்த 60 பந்துகளில் 72 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற ஈஸி டார்கெட்தான். 

ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் என்னும் இளம் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித், பராக் இருவரும் நிதானமாக அதே சமயம் பவுண்டரிக்கு அடிக்கவேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு அடித்து அருமையான ஆட்டம் ஆடினர். மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, மார்க்கண்டே, சஹார் என பெளலர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 15 ஓவர்களில் 128 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான். அடுத்த 30 பந்துகளில் 34 ரன்கள்தான் தேவை.

டெத் ஓவர்களில் மீண்டும் மலிங்கா, பும்ரா, ஹர்திக் என பெளலிங்கை மாற்றினார் ரோஹித். மறுபுறம் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் ஸ்மித். பராக்-ஸ்மித் கூட்டணி தொடர  ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் விக்கெட் விழுந்தது. ரியான் பராக் ரன் அவுட் ஆனார். 29 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார் பராக். விக்கெட் விழுந்தாலும் பவுண்டரி, 2 ரன்கள் என அடித்துக்கொண்டிருந்தார் ஸ்மித். 18 ஓவர்களின் முடிவில் 153 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான். அடுத்த 12 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்கிற நிலையில் பும்ராவின் ஓவரில் டர்னர் முதல் பந்திலேயே அவுட் ஆனார். ஸ்டூவர்ட் பின்னி வந்தார். ஆனால்,  இந்த ஓவரில் ராஜஸ்தானால் 5 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டி ராஜஸ்தானை வெற்றிபெறவைத்தார் பின்னி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 59 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் இருந்தார்.

#RRvMI

இந்த வெற்றியோடு 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான். சென்னை, மும்பை, டெல்லி, பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்