ஒருத்தருக்கு ஹோம் அலர்ஜி... இன்னொருத்தருக்கு அவே அலர்ஜி... ஆனா, எல்லாம் மாறிப்போயி! #KXIPvDC | The allergic home and away teams clash together

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (21/04/2019)

கடைசி தொடர்பு:14:22 (21/04/2019)

ஒருத்தருக்கு ஹோம் அலர்ஜி... இன்னொருத்தருக்கு அவே அலர்ஜி... ஆனா, எல்லாம் மாறிப்போயி! #KXIPvDC

புள்ளிப் பட்டியலில் பஞ்சாபைப் பின்னுக்குத் தள்ளி, மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது டெல்லி. இந்த சீசனிலாவது பிளே ஆஃபுக்கு முன்னேறுமா என ஏக்கத்துடன் இருக்கிறார்கள் டெல்லி ரசிகர்கள். கங்குலியின் கோச்சிங் திறமையில் அவர்கள் பைனல் சென்றாலே பெரிய விஷயம் தான்.

ஒருத்தருக்கு ஹோம் அலர்ஜி... இன்னொருத்தருக்கு அவே அலர்ஜி... ஆனா, எல்லாம் மாறிப்போயி! #KXIPvDC

பஞ்சாபும் டெல்லியும் இதற்கு முன்பு ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. அதைவிட இந்த சீசனில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. KXIPvDC

பஞ்சாப் 9 போட்டிகள்

ஹோம் (5) : வெற்றி 4 ; தோல்வி 1 (வெற்றி 80%)
அவே (4) : வெற்றி 1 ; தோல்வி 3 (வெற்றி 25%)

டெல்லி கேப்பிடல்ஸ் 9 போட்டிகள்

ஹோம் (4) : வெற்றி 1 ; தோல்வி 3 (வெற்றி 25%)
அவே (5) : வெற்றி 4 ; தோல்வி 1 (வெற்றி 80%)

'இப்படியொரு கேவலமான தலையை யாராவது பார்த்திருக்கிறார்களா யுவர் ஆனர்' என்பது போல் அப்படியொரு ஒற்றுமை. ஒருவருக்கு ஹோம் அலெர்ஜி, இன்னொருவருக்கு அவே அலர்ஜி. அப்போதுதான் அந்த த்ரில்லிங்கான நேரம் வந்தது. டெல்லியும் பஞ்சாபும் மோதிக்கொள்ளும் போட்டி, டெல்லி கோட்லாவில் நடக்கிறது. இப்போது டெல்லிக்கு ஹோம், பஞ்சாபுக்கு அவே. ஐபிஎல் சூதாட்டம் என்று பேசுபவர்களால்கூட இப்படியொரு டிராமா நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நேற்று இன்னொன்றும் நடந்தது. மாலை நடந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் மும்பை 161 ரன்கள் எடுத்தது. அதை சேஸ் செய்த ராஜஸ்தான் 162 ரன்கள் எடுத்தது. நேற்று இரவு போட்டியில் பஞ்சாப் அணி 163 ரன்கள் எடுத்தது. இதெல்லாம் ஸ்டேட்ஸ்ல... KXIPvDC

KXIPvDC



இரண்டு அணியுமே சேஸிங் செய்ய வேண்டும் என முனைப்பில் இருந்தது. ஆனால், அந்த அதிர்ஷ்டம் டெலிக்கே வாய்த்தது. இங்ராமை மீண்டும் எடுத்தார் ஸ்ரேயாஸ். அதுதான் இந்தப் போட்டியின் டிரம்ப் கார்டு என அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. ராகுலும், கெயிலும் பஞ்சாபுக்கு வழக்கம் போல் ஓப்பனிங் செய்தார்கள். இந்த சீசனில் பஞ்சாப் அடித்த ஒட்டுமொத்த ரன்களில் ராகுல், கெயில் ஜோடி அடித்த ரன்கள் மட்டும் 820. கெயில் நான்கு அரைசதம் , ராகுல் நான்கு அரைசதம், ஒரு சதம் என இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பஞ்சாப் இவ்வளவு தூரம் வந்ததில் இவர்களின் பங்கு அளப்பறியது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை லமிச்சனே வீசினார். சிக்ஸ், பவுண்டரி என அடித்த ராகுல், அதே ஓவரில் பன்ட்டின் ஸ்டம்பிங்கால் அவுட் ஆனார். முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே இஷாந்தின் அடுத்த ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என கெயில் தன் மோடுக்கு மாறினார். லாங் ஆனில் அவர் அடித்த சிக்ஸ் மட்டும் 101 மீட்டர். அடுத்து வீசிய லமிச்சனேவையும் ஒரு ' பவுண்டரி ' பார்த்தார் கெயில். நான்கு பவுண்டரிக்களை அந்த ஓவரில் துவம்சம் செய்தார். ரபாடா பந்துவீச்சில் அகர்வாலும் அவுட் ஆக, கில்லர் மில்லரும் பவர் பிளே முடிவதற்குள் கிரிஸுக்கு வந்துவிட்டார்.

கெயில்



இந்த சீசன் கில்லர் மில்லர் என்னும் அடைமொழிக்கு ஏற்ப அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. விளையாடிய 8 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட, 178 ரன்கள். ஆவரேஜும் மோசம். பவர் பிளே முடிவில் 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது பஞ்சாப். `இப்ப கைய முறுக்குவார் பாரேன்’ என காத்திருந்த மில்லரின் அரிய வகை ரசிகர்களுக்கு வாய்த்தது பெருஞ்சோகம். அக்ஷர் பட்டேல் வீசிய முதல் அடிக்க ஆசைப்பட, பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மில்லர்.

இதற்கு முன்பு மிஷ்ரா வீசிய ஓவரிலேயே ஒரு சிக்ஸை பார்வையாளர்கள் பக்கம் பார்க் செய்தார் கெயில். 'ஐ ஸ்பின்னர் ' என்பது போல் மீண்டும் மிஷ்ராஜியே பந்துவீச வந்தார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர். 25 பந்துகளில் அரைசதம் கடந்தார் கெயில். ஸ்பின்னர் போட்டால் கெயில் அடிக்கிறார் என தெரிந்தும் , மீண்டும் மீண்டும் ஸ்பின்னர்களை இறக்கும் லாகவம் எல்லாம் சில கேப்டன்களுக்கே வாய்க்கும். 12-வது ஓவரின் இறுதியில் 100 ரன்களை எட்டியது பஞ்சாப்.

லமிச்சனே வீசிய பந்தில், மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார் கெயில். அடுத்துத்தான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. பிஹைண்ட் த ஸ்டம்ப் மிகவும் பின்னால் நின்று லமிச்சனே அடுத்த பந்தை வீசினார். கெயிலின் கைகள் மீண்டும் ஒரு பவர் ஹிட் அடித்தது. டீப் விக்கெட் திசையில் இருக்கும் இங்க்ராம், அதை அநாயசமாகப் பிடித்தார். ஆனால், அவரால் நிலைகொள்ள முடியவில்லை. தடுமாறி விழ எத்தனித்து, சிக்ஸ் பவுண்டரிக்குள் விழுந்தார். அதற்கு முன்பாக , பந்தை தூக்கி அக்ஷர் பட்டேல் இருக்கும் திசையில் எறிந்துவிட்டு விழுந்தார். பந்து வீசிய லமிச்சனேவுக்கும், பிடித்த பட்டேலுக்கும், அவர்களுது ஸ்டேட்ஸில் ஒரு விக்கெட் ஏறி இருக்கும். ஆனால், அந்த கெயிலின் விக்கெட்டுக்கான முழு சொந்தக்காரர் கோலின் இங்க்ராம். அடுத்ததாக அஷ்வினின் ஆஸ்தான ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் இறங்கினார். இதற்கு முன்பு பேட் செய்த ஐந்து இன்னிங்ஸில் 34 ரன்கள் அடித்து இருக்கிறார் சாம் குர்ரன். அதில் ஒரு போட்டியில் 20 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லமிச்சனின் இதே ஓவரில் பெரிதாக சிரமம் கொடுக்காமல், லமிச்சனிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாம்.

மந்தீப் சிங்

 



13 ஓவர்களுக்கு 106 ரன்கள். இனி அடித்து ஆட வேண்டிய நேரம். ஆனால், `நம்மகிட்டத்தான் சைக்கிள் இல்லையே’ என்பது போல் விழிபிதுங்கி நின்றது பஞ்சாப் . `சரி, நானே போறேன்’ என நாட்டாமை அஷ்வின் உள்நுழைந்தார். சென்ற போட்டியின் இறுதி ஓவரில் அடித்த இரண்டு சிக்ஸ் அவருக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்து இருக்கும். அடுத்த எல்லா ஓவரிலும் சிங்கிள் டிஜிட் ரன்கள்தான். மந்தீப்பும் கழண்டு கொள்ள, கடைசி ஓவரில் அஷ்வினும் அவுட்டார். பஞ்சாப் இறுதியாக 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் இலக்கு, ஆனால், சொந்த மண் என்கிற மரண பயத்தோடு களமிறங்கியது டெல்லி. ஷமி வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே செல்ல, சாம் குர்ரன் வீசிய இரண்டாம் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் தவான். வில்ஜியான் வீசிய பந்தை கவரில் அடித்த தவான், சட்டென ஓட வேண்டாம் என முடிவை மாற்றிவிட்டார். பிருத்வி ஷா பரிதாபமாக ரன் அவுட் செய்யப்பட்டார். பவர் பிளே முடிவில் 60 ரன்கள் எடுத்து பாசிட்டிவாக இருந்தது டெல்லி.

தவான்



கிரிக்கெட் பவுலர்களை எவ்வளவு பாடு படுத்துகிறது என்பதற்கு இந்த சீசன் முழுக்கவே அத்தனை உதாரணங்கள். முருகன் அஷ்வினின் வீசிய பந்து அவரது கையை விட்டு நழுவிச் செல்ல, அதற்கு நோ பால், கொடுக்கப்பட்டு, அடுத்த பால் ஃப்ரீ ஹிட் வேறு வீசினார் அஷ்வின். அதே போல் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 13-வது ஓவரில் அஷ்வினை கிண்டல் செய்தார் தவான். 'மன்காட்' முறையில் அஷ்வின் விக்கெட் வீழ்த்துகிறார் என்பதால், க்ரீஸைவிட்டு வெளியே செல்வது போல் நாடகத்தனம் செய்துகொண்டு இருந்தார் தவான். 

தோனி `நான் ஸ்டிரைக்கர்’ எண்டில் இருந்தபோது பாண்டியா, தோனியை மன்காட் செய்ய முயன்றார். நரைன், கோலியை அப்படி அவுட்டாக்க முயல, கோலி க்ரீஸ் லைனில் உட்கார்ந்து கொள்வது போல் காமெடி செய்தார். பவுலர்கள் வார்னிங் கொடுக்க வேண்டும் என்று எந்தவொரு ரூல்புக்கிலும் எழுதவில்லை. நான் ஸ்ட்ரைகிங் பேட்ஸ்மேன், பந்து ரிலீஸாகும் முன் க்ரீஸை தாண்டினால், ரன் அவுட் செய்யலாம். அவ்வளவே! நாம் தான் வார்னிங் தருவதில்லை. ஜென்டில்மேன் கேமுக்கு என்னாவது என்றெல்லாம் புலம்புகிறோம்.

 

Ingram

 

எந்த கீப்பரும் பேட்ஸ்மேனுக்கு வார்னிங் எல்லாம் தருவதில்லை. நோபாலை சரிபார்க்கும் அம்பயர், முறைப்படி, பேட்ஸ்மேன் வெளியே நின்றிருந்தால், அவர் வார்னிங் கொடுப்பது போல் சிஸ்டம் இருந்தால் மட்டுமே, இதை மாற்ற முடியும். இந்த ஐடியாவை முன்வைத்தது டேல் ஸ்ட்யென். பவுலர்கள் பாவம் பாஸ்

ஓவருக்கு பத்து ரன்கள் என அடித்துக்கொண்டு இருந்ததால், போட்டி ஒன்சைடாக சென்று கொண்டு இருந்தது. அஷ்வினை கிண்டல் செய்த அடுத்த ஓவரிலேயே, வில்ஜியான் பந்தில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் 'மீசை முறுக்கி' தவான். அடுத்து வில்ஜியான் பந்து வீச்சில் பன்ட்டும் அவுட்டாக பஞ்சாபுக்கு கொஞ்சம் டார்ச்லைட் ஒளி கிடைத்தது. ஆனால், இறங்கியது. கோலிங் இங்க்ராம். சாம் குர்ரன் போல் வந்த வேகத்தில் செல்வார் என நினைத்தால், வில்ஜியான் கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டார்.

அப்படியும் ஷமி பெனல்ட்டிமேட் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுக்க, லாஸ்ட் ஓவர் த்ரில்லர் நோக்கி போட்டி நகர்ந்தது. ஆனால், இந்த முறை எந்தத் தவறும் நிகழக்கூடாது என இருந்த ஸ்ரேயாஸ், பொறுப்பான கேப்டனாக வின்னிங் பவுண்டரி அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார்.

KXIPvDC

 



புள்ளிப் பட்டியலில் பஞ்சாபைப் பின்னுக்குத் தள்ளி, மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது டெல்லி. இந்த சீசனிலாவது பிளே ஆஃபுக்கு முன்னேறுமா என ஏக்கத்துடன் இருக்கிறார்கள் டெல்லி ரசிகர்கள். கங்குலியின் ஆலோசனை, பாண்டிங்கின் கோச்சிங் திறமையில் அவர்கள் ஃபைனல் சென்றாலே பெரிய விஷயம்தான். பஞ்சாப் முஜிபுர் ரஹ்மானை இழந்து தவிக்கிறது. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள் என்பதால், பஞ்சாபுக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

 


டிரெண்டிங் @ விகடன்