``#10yearchallenge விளையாட்டின் எங்களுடைய வெர்ஷன் இது!” - கோலி பகிர்ந்த நாஸ்டால்ஜியா புகைப்படம் | kohli and steyn share 10 year challenge goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:14:47 (22/04/2019)

``#10yearchallenge விளையாட்டின் எங்களுடைய வெர்ஷன் இது!” - கோலி பகிர்ந்த நாஸ்டால்ஜியா புகைப்படம்

பெங்களூரு ராயல்  சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கோலி அண்டு கோ, 161 ரன்கள் எடுத்தது. வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கிய டேபிள் டாப்பர் சென்னை சூப்பர் கிங்ஸ், பலமான பேட்டிங் ஆர்டருடன் சேஸிங்கைத் தொடங்கியது. இதற்கு முந்தைய போட்டியில் ஓய்வில் இருந்த தோனி, பிராவோ அணிக்குத் திரும்பியது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பலம் என்றாலும், பெங்களூருவுக்கு ரிட்டர்னாகியிருப்பதோ டெயில் ஸ்டெயின்! #10yearchallenge 

#10yearchallenge

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீச ஸ்டெயினை அழைத்தார் கேப்டன் கோலி. ஸ்டெயினின் ரிட்டர்னால், பெங்களூருவுக்குப் பலன். முதல் ஓவரிலேயே வாட்சன், ரெய்னா பெவிலியன் திரும்ப, சென்னை அணி தடுமாறத் தொடங்கியது. ரெய்னாவை க்ளீன் போல்டாக்கியபோது, கோலியும் ஸ்டெயினும் கொண்டாடித் தீர்த்த வீடியோதான் நேற்றைய போட்டியில் ஹிட். தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்து, கடைசி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது ஆர்.சி.பி. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு, இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நெருக்கடியின்போது சரியான நேரத்தில் அணிக்குத் திரும்ப வந்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், சென்னைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற முக்கியப் பங்காற்றினார்.

இதுகுறித்துப் பேசிய கேப்டன் கோலி, "டெயில் ஸ்டெயின் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்டெயினுடன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது.  சமீபத்தில், சமூக வலைதளத்தில் ட்ரென்டான #10yearchallenge விளையாட்டின் எங்களுடைய வெர்ஷன் இது" என 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கோலி - ஸ்டெயின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், 2019-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தார் கேப்டன் கோலி. "இந்தப் புகைப்படம் நாஸ்டால்ஜியாவைக் கிளப்புகிறது.

10 ஆண்டுகளில் கோலியின் விளையாட்டு அடுத்த கட்டத்துக்கு மெருகேறியுள்ளது. உலகின் சிறந்த பேட்ஸ்மேனான இந்திய கேப்டன் கோலியுடன் சேர்ந்து மீண்டும் விளையாடுவது பெருமையாக உள்ளது" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் ஸ்டெயின். 2009-ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு விளையாடியதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும், 2013 - 2015 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடினார் ஸ்டெயின். 2016-ம் ஆண்டு குஜராத் லையன்ஸ் அணிக்காக விளையாடிய பின், அடுத்த இரண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காத அவர், இந்த சீசனில் ஆர்.சி.பி-யில் இணைந்துள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்....!