``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை!” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ் | mumbai players are asked to go for holiday

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (23/04/2019)

கடைசி தொடர்பு:09:20 (23/04/2019)

``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை!” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்

ஐ.பி.எல் 2019 போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டது. ஹைதராபாத் அணியைத் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் குறைந்தது பத்துப் போட்டிகளில் விளையாடிவிட்டன. ஹைதராபாத் அணியும் இன்று தனது 10 -வது போட்டியில் சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது. புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிக்க வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள மும்பை அணி தனது வீரர்களுக்கு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளது. 

மும்பை வீரர்கள்

கடந்த சனிக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அதற்கு அடுத்தபடியாக 6 நாள்கள் கழித்து, வரும் வெள்ளிக்கிழமை சென்னை அணியுடன் மோதவுள்ளது. இந்த இடைவெளியை வீரர்களின் பணிச் சுமையைக் குறைக்க பயன்படுத்த முடிவு செய்த மும்பை அணி, வீரர்களுக்கு 4 நாள்கள் பயிற்சியிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. இந்த 4 நாள்களில் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லலாம், ஊர் சுற்றலாம் ஆனால் பேட், மற்றும் பந்தை மட்டும் தொடக் கூடாது என வீரர்களுக்குச் செல்லமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். 

இது தொடர்பாக `கிரிக்கெட் நெக்ஸ்ட்’ என ஊடகத்துக்குப் பேசிய மும்பை அணியின் நிர்வாகி ஒருவர், ``வீரர்கள் நலன்தான் எங்களுக்கு எப்போதும் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்போம். இந்த 4 நாள்கள் பேட் மற்றும் பந்தை தொடாமல் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கிறோம்” என்றார். 

மும்பை

உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்துத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர், ``ரோகித், பும்ரா, ஹர்திக் மட்டுமல்ல. குயிண்டன் டி காக், மலிங்கா என மற்ற நாட்டு வீரர்களும் உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விடுமுறை அவர்களது பணிச் சுமையைக் குறைக்க உதவும். வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்” என்றார். மும்பை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 3 -வது இடத்தில் உள்ளது. 

இந்த விடுமுறைக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் மீண்டும் வீரர்கள் புத்துணர்வுடன் களத்தில் இறங்குவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.