தங்கம் வென்ற தமிழச்சி - ஆசிய தடகளத்தில் கோமதி மாரிமுத்து அபாரம் #AAC2019 | Gomathi Marimuthu wins India’s first gold in doha asian athletic

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (23/04/2019)

கடைசி தொடர்பு:11:22 (23/04/2019)

தங்கம் வென்ற தமிழச்சி - ஆசிய தடகளத்தில் கோமதி மாரிமுத்து அபாரம் #AAC2019

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

தங்கம் வெள்ற தமிழச்சி கோமதி

இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.  இத்தனைக்கும், கோமதிக்கு நல்ல ஸ்டார்ட்டிங் கிடைக்கவில்லை. இதனால், சீன வீராங்கனை வங் சுன் யு முன்னிலை பெற்றார். ஒரு கட்டத்தில், கடைசி இரண்டாவது வீராங்கனையாகவும் பின்தங்கினார். ஆனால், கடைசி 150 மீட்டர் தூரத்துக்குள் வேகமெடுத்தவர்,  எல்லை கோட்டருகே வைத்து  சீன வீராங்கனை வங் சுன் யுவை  பின்னுக்குத் தள்ளி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தத் தொடரில், இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. 

திருச்சியைச் சேர்ந்த கோமதி, சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தடகளத்தில், குறிப்பாக 800 மீட்டர் ஓட்டத்தில் அபார திறன் உடையவராக இருந்தார்.  20 வயது முதல் தடகளத்தில் பங்கேற்றுவரும்  இவரின்  10 வருட கால உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.  பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் கோமதி பணிபுரிந்துவருகிறார்.

தடகள வீராங்கனை

வெற்றிகுறித்து அவர்,  'எல்லைக் கோட்டை எட்டியதும், என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் 'என்றார். 

ஆசிய தடகளப் போட்டியில், 2 நாள்களில் இந்தியா 1 தங்கம் 2 வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க