தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன? | why tamilnadu chief minister not anounced cash reward for gomathi?

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (24/04/2019)

கடைசி தொடர்பு:18:09 (24/04/2019)

தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?

றுமையில் தவித்து, கடும் போராட்டத்துக்குப் பிறகு ஆசிய  தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு, சல்லிக் காசுகூட  பரிசுத்தொகை அறிவிக்காமல், வெறும் வாழ்த்துக் கடிதத்துடன் முதல்வர் பழனிசாமி முடித்துக் கொண்டது, விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

கோமதி மாரிமுத்து (நடுவில் இருப்பவர்)

ஆசிய தடகளப் போட்டி தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது. தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உலகம் முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோமதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கோமதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``சர்வதேச அளவில் இதுபோன்று தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். ஆனால், உடனடியாக எந்த பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தேர்தல் நடைமுறை அமலில் இருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதிபெற்று பரிசுத்தொகை அறிவிக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படிச் செய்யவில்லை. வெறும் வாழ்த்தோடு நிறுத்திவிட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ``தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும். மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இல்லை" என்று கூறியிருந்தார்.  ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், சாதனை படைக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடனடியாக பரிசுத்தொகை அறிவித்து விடுவார். விளையாட்டு வீரர்- வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதில் ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை. 

ஓட்டப் பந்தயத்தில் கோமதி

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களையும் இடர்பாடுகளையும் கடந்து சாதித்துள்ள கோமதிக்கு, முதல்வர் வெறும்  வாழ்த்துக் கடிதத்துடன் முடித்துக்கொண்டது ஆச்சர்யத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தடகளத்தில், அதுவும் 800 மீட்டர் ஓட்டம் போன்ற கடினமான பிரிவில்  தமிழக வீராங்கனை வெற்றிபெறுவது அத்தி பூத்தார்ப் போன்றது.

 இதே தோஹா நகரில் நடந்த  ஆசியப் போட்டியில்தான், தடகள வீராங்கனை  சாந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பரிசுத்தொகை அளித்து ஊக்கப்படுத்தினார். சாந்தி மீது பாலினப் புகார் எழுந்து பதக்கம் பறிக்கப்பட்ட நிலையிலும்கூட கருணாநிதி அவருக்கு ஆதரவாக இருந்தார்.  சாந்திக்குப் பிறகு சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த விவசாயி மகள் கோமதிக்கு, வெறும் வாழ்த்துக் கடிதம் அனுப்பிவிட்டு பரிசுத்தொகை அறிவிக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று  விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமம். போதிய பேருந்து வசதி இல்லாத ஊர் அது. தந்தை மாரிமுத்து, விவசாயப் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்தவர். சில வருடங்களுக்கு முன் மாரிமுத்து இறந்துபோனார்.  தாய் ராஜாத்தி விவசாயக் கூலி வேலைக்குச் சென்று  தன் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றினார். அதில், கோமதி கடைசி மகள். 

மூச்சுக்கு 300 முறை' நானும் ஒரு விவசாயி 'என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, விவசாயி மகளைக் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க