``ட்ரயல்பிளேஸர்ஸ், சூப்பர்நோவோஸ், வெலாசிட்டி!”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல் | women's t20 challenge

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (24/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (24/04/2019)

``ட்ரயல்பிளேஸர்ஸ், சூப்பர்நோவோஸ், வெலாசிட்டி!”- இது பெண்களுக்கான மினி ஐபிஎல்

இந்தியாவில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில், 'ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்துவருகிறது. இந்நிலையில்தான், கடந்த ஆண்டு பெண்களுக்கான ஒரு டி20 போட்டி நடத்தப்பட்டது. 

பெண்கள் கிரிக்கெட்

மும்பையில் நடத்தப்பட்ட அந்த காட்சிப் போட்டியில், ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான  ட்ரயல்பிளேஸர்ஸ் அணியும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதியது. இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று அணிகள் மோதும் மினி தொடராகப் பெண்கள் டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

இந்த முறை புதிதாக இணைந்திருக்கும் அணியின் பெயர், `வெலாசிட்டி'. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். மே மாதம் 6-ம் தேதி தொடங்கும் இந்த மினி தொடர், மே 11-ல் நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளின் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கெனவே இருக்கும் இரு அணிகளும் அதே கேப்டன்களின் தலைமையில் இறங்கும் என்றும், வெலாசிட்டி அணிக்கு விரைவில் கேப்டன் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. 

இந்த மினி தொடரில், சில வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் போட்டிகள் அனைத்தும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. 

பெண்கள் கிரிக்கெட்டுக்கு இது நல்ல தொடக்கம் என்றாலும், முழு ஐபிஎல் தொடரைப் போன்று குறைந்தது 6 அணிகள் கொண்ட தொடராக இதனை நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறைந்த அளவிலான அணிகள் இருப்பதாலும் வெளிநாட்டு வீராங்கனைகள் கலந்துகொள்வதாலும், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீராங்கனைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. சாதிக்கத் துடிக்கும் மற்ற வீராங்கனைகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக, விரைவில் இதனைப் பெரிதாக நடத்த வேண்டும் என பிசிசிஐ-க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
பெண்களுக்கான ஐபிஎல் தொடர் கோரிக்கைக்கு, பிசிசிஐ ஒரு அணியின் எண்ணிக்கை மட்டும் கூட்டியுள்ளது தொடர்பாக, உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்...