`உலகக் கோப்பைக்கு முன் இடைவெளி எடுத்துக்கொள்வேன்!' -  காயம் குறித்து தோனி | Dhoni speaks about his injury

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (24/04/2019)

கடைசி தொடர்பு:17:19 (24/04/2019)

`உலகக் கோப்பைக்கு முன் இடைவெளி எடுத்துக்கொள்வேன்!' -  காயம் குறித்து தோனி

உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் உலகக் கோப்பை தொடருக்கு முன்னால் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்திருக்கிறார். 

தோனி

Photo: IPLT20.com

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹைதராபாத்தில் கடந்தவாரம் நடைபெற்ற இவ்விரு அணிகள் இடையிலான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடவில்லை. உலகக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருக்கும்நிலையில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் பெரிதாகக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் அந்தப் போட்டியில் விளையாடாமல் தவிர்த்தார். 

இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய வெற்றிக்குப் பின்னர் பேசிய தோனியிடம் காயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, ``காயம் இன்னும்  இருக்கிறது. அதேநேரம், அது மோசமடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உலகக் கோப்பைத் தொடர் வர இருக்கும் சூழலில் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் விழிப்புடன் இருக்கிறேன். 
முதுகுப் பகுதியில் சிறிய அளவில் வலி இருக்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் தசைப்பிடிப்பு இருந்தது. ஆனால், தற்போது அப்படி எதுவும் இல்லை. சர்வதேசப் போட்டிகளில் வலியுடன்தான் நான் விளையாடி வருகிறேன்.

தோனி

Photo: IPLT20.com

100 சதவிகித உடற்தகுதியுடன் நீங்கள் விளையாட வேண்டும் என்று விரும்பினால், உங்களின் அடுத்த போட்டியை விளையாட நீங்கள் 5 ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டிய நிலை வரும். இந்த விவகாரத்தை நான் கருத்தில்கொள்ள வேண்டும். காயம் மோசமானால், உலகக் கோப்பை தொடருக்கு முன் நிச்சயம் கிரிக்கெட்டில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வேன்'' என்று பேசியிருக்கிறார். 

37 வயதான தோனி, இந்திய அணிக்காக இதுவரை 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். உலகின் முன்னணி விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கும் தோனி, உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் தோனி, இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10,500 ரன்கள் குவித்திருக்கிறார்.

தோனி

Photo: IPLT20.com

நடப்பு ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் தோனி. ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இன்னும் 3 லீக் போட்டிகள் மீதமிருக்கின்றன. வரும் மே மாதம் 12-ம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடையும் நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது.