கெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம் | WI Worldcup squad announced

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:09:00 (25/04/2019)

கெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்

உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கெயில், ரஸல் உள்ளிட்ட ஐபிஎல் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். 

கெயில் ரஸல்

உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், மே மாதம் 30-ம் தேதி, இங்கிலாந்து நாட்டில் தொடங்க இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னர், அணிகள் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவிக்க வேண்டும். அதன்படி, உலகக்கோப்பை தொடருக்குத் தகுதிபெற்றுள்ள அணிகள், தங்களின் அணியை அறிவித்துவருகின்றனர். தற்போது அறிவிக்கப்படும் அணிகளில், வரும் மே 23 -ம் தேதி வரை ஐசிசி-யின் அனுமதி இல்லாமலேயே மாற்றங்கள் செய்ய முடியும்.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டர் தலைமையில் களமிறங்கும் அணியில், நடப்பு ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிவரும் ரஸல் மற்றும் கெயில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ரஸல் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான ஒரே ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு இந்திய தீவுகள் அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மாஸ் காட்டிய கெயில், அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடருடன் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில், ரஸல், பரத்வைட், லீவிஸ், பூரன், ஹெட்மெயர் உள்ளிட்ட  வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளில் விளையாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த அணியில் சுனில் நரைன், பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி:


ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பரத்வைட், கெயில், டேரன் பிராவோ, லீவிஸ், ஃபாபியன் ஆலென், கீமர் ரோச், பூரன், தாமஸ், ஷை ஹோப், கேபிரியல், கோட்ரல். ஹெட்மையர்.