``அதே மனநிலையுடன் இங்கிலாந்து செல்ல வேண்டாம்; எல்லாம் மாறிவிட்டது!” - ராகுல் டிராவிட் | dravid shares about WC

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (25/04/2019)

கடைசி தொடர்பு:14:41 (25/04/2019)

 ``அதே மனநிலையுடன் இங்கிலாந்து செல்ல வேண்டாம்; எல்லாம் மாறிவிட்டது!” - ராகுல் டிராவிட்

உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. அணிகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இந்த அணிகள், தேர்வு தொடர்பாகப் பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்திய அணி தேர்வுகுறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, பன்ட் மற்றும் ராயுடு அணியில் இடம்பெறாதது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர் . 

இந்திய அணி

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய இளையோர் அணிக்கான பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வரவிருக்கும் உலகக்கோப்பை தொடர்பாக தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக ஐசிசி இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய அணி தேர்வு சிறப்பாக இருப்பதாகத்  தெரிவித்திருக்கிறார். 

உலகக்கோப்பை தொடர்பாகப் பேசிய அவர்,  ``இந்திய அணி தேர்வு சிறப்பாகவும் சமநிலையுடனும் இருக்கிறது. இனி செய்யவேண்டியது எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் களத்தில் சிறப்பாகச்  செயல்பட வேண்டும். அணித் தேர்வில் எப்போதும் ஒன்றிரண்டு இடங்களுக்கு விவாதம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால், தற்போது அணி தேர்வுசெய்யப்பட்டுவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார். 

டிராவிட்

கடைசியாக, இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பைத் தொடர் 1999 -ம் ஆண்டு நடைபெற்றது. அந்தத்  தொடரில், ராகுல் டிராவிட் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அப்போது நடந்த உலகக்கோப்பை தொடருக்கும் தற்போது நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

 ``1999 -ம் ஆண்டு நடைபெற்ற தொடருக்கும் தற்போது நடைபெறும் தொடருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். அப்போது இங்கிலாந்து ஆடுகளத்தில் ரன்கள் எடுப்பது சிரமம். பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால், சமீபகாலமாக இங்கிலாந்து மைதானங்கள் பெரும்பாலும் தட்டையான ஆடுகளங்காக உள்ளன. அதனால், பெரும்பாலும் ஹை ஸ்கோரிங் போட்டிகளாகத்தான் இருக்கும். இங்கிலாந்து குறித்த பழைய எண்ணங்களுடன் தற்போது செயல்பட முடியாது” என்றார்.