``ஹேட்டர்ஸ்... இதோ என் ரெக்கார்ட்ஸ்!” - ஆர்.சி.பி கலாய்க்கு அஷோக் டிண்டா காட்டம் | Dinda reply to RCB post

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (26/04/2019)

கடைசி தொடர்பு:11:35 (26/04/2019)

``ஹேட்டர்ஸ்... இதோ என் ரெக்கார்ட்ஸ்!” - ஆர்.சி.பி கலாய்க்கு அஷோக் டிண்டா காட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போது வரை அனைத்து அணிகளுக்குமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னை அணி, ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. பெங்களூரு, ராஜஸ்தான் கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையான சவால்களை சந்திக்கத் தயாராகிவருகின்றன. 

ஐ.பி.எல்

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் போட்டிகளைத் தாண்டிய பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அதிகம் கவனம் ஈர்க்கின்றன. ஐபிஎல்  தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும், தனித் தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் வைத்துக்கொண்டு, மாஸ் காட்டிவருகின்றனர். ஒவ்வொரு அணி நிர்வாகமும் இதற்கென தனி டீம் வைத்து கெத்து காட்டி வருகிறது. 

நீக்கப்பட்ட டிண்டாவை கலாய்த்த ட்வீட்

அப்படி பதியப்படும் கருத்துகள், அவ்வப்போது சர்ச்சையும் ஆகும். தற்போது இதில் சிக்கியது ஆர்.சி.பி-யின் ட்விட்டர் பக்கம்தான். சென்னை பெங்களூரு ஆட்டத்தில், உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் தோனி 24 ரன்கள் குவித்தார். எனினும், கடைசிப் பந்தை டாட் பாலாக வீசி பெங்களூரு வெற்றிக்கு வழிவகுத்தார். இந்தப் போட்டி முடிந்த பின்னர், உமேஷ் யாதவை பலர் ட்ரோல் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் உமேஷ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

பெங்களூர் அணியின் விளக்கம்

அந்தப் போட்டி முடிந்த பின்னர், ஆர்.சி.பி-யின் ட்விட்டர் பக்கத்தில், உமேஷ் யாதவ் படத்தைப் போட்டு டிண்டாவை கலாய்த்திருந்தனர். இந்த ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர்.சி.பி ட்விட்டர் பக்கம் விளக்கம் ஒன்றையும் அளித்தது. அதாவது, ``உங்களில் பலர் குறிப்பிட்டதுபோன்று கடந்த ட்வீட் மோசமான ஒன்றுதான். எனினும், உமேஷ் யாதவை தொடர்ந்து கலாய்த்துவந்தவர்களின் சவாலை ஏற்று, சிறப்பாகப் பந்துவீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகள் எடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

 

 

 

இந்நிலையில், தன்னை கலாய்த்தவர்களுக்கு டிண்டா பதிலடிகொடுத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில், தனது பந்துவீச்சு தொடர்பான  புள்ளி விவரங்களை அடுக்கிய அவர்,  ``என்னை வெறுப்பவர்களுக்கு சரியான புள்ளிவிவரங்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். என்னைப் பற்றி உண்மைக்கு எதிரான கருத்துகளை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

அசோக் டிண்டா, முன்னதாக பெங்களூரு அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடக்கத்தில் கொல்கத்தா அணியில் விளையாடிய அவர், பின்னர் புனே, ஆர்.சி.பி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.