மலிங்கா, பும்ரா, பாண்டியா பிரதர்ஸ்... சென்னையைச் சுருட்டிய மும்பை அட்டாக்! #CSKvMI | Malinga, Bumrah, Pandya Brothers... Mumbai attack Demolishes Chennai Batting! #CSKVsMI

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (27/04/2019)

கடைசி தொடர்பு:12:24 (27/04/2019)

மலிங்கா, பும்ரா, பாண்டியா பிரதர்ஸ்... சென்னையைச் சுருட்டிய மும்பை அட்டாக்! #CSKvMI

12 மேட்ச்களின் முடிவில் 8 வெற்றி, 16 புள்ளிகள் என இப்போதும் டாப்பில் இருக்கிறது சென்னை. ஆனால், மும்பை, டெல்லி, ஐதராபாத் அணிகள் சென்னையை விரட்டி வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை வெற்றிபெற்றால்தான் 20 புள்ளிகளுடன் கெத்தாக ப்ளே ஆஃபில் விளையாடும்!

மலிங்கா, பும்ரா, பாண்டியா பிரதர்ஸ்... சென்னையைச் சுருட்டிய மும்பை அட்டாக்! #CSKvMI

2019 சீசனில் சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே தோற்றதில்லை என்கிற பெருமையை காலி செய்திருக்கிறது மும்பை. கிளப் கால்பந்தில் பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான போட்டியை `எல் கிளாசிகோ’ என்பதுபோல கிரிக்கெட்டின் `எல் கிளாசிகோ’ எனப் புகழப்படுவது சென்னை - மும்பை போட்டி. இந்த சீசனில் ஏற்கெனவே மும்பையில் மும்பை இந்தியன்ஸிடம் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்க, இந்த முறை சென்னை பழிதீர்க்கும் என்கிற ஆருடங்கள் பொய்யாய்ப்போனது. மலிங்கா, பும்ரா, பாண்டியா பிரதர்ஸ் என மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கால் சென்னையைச் சுருட்டியது மும்பை!

மீண்டும் தோனி இல்லை!

இந்த சீசனில் தோனி இல்லாத இரண்டாவது போட்டியாக நடந்தது சென்னை வெர்ஸஸ் மும்பை மோதல். தோனி ஏற்கெனவே, முதுகு வலியில் அவதிப்பட்டுவரும் நிலையில் நேற்று அவருக்குக் காய்ச்சல் என்று சொல்லப்பட்டது. தோனி இல்லாததால் ரெய்னா தலைமையில் களமிறங்கிய சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஃபாஃப் டுப்பெளஸ்ஸிக்கு பதிலாகத் தமிழக வீரர் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் தோனிக்கு பதிலாக  துருவ் ஷோரி, ஜடேஜாவுக்கு பதிலாக  மிட்செல் சான்ட்னர் அணியில் இடம்பெற்றிருந்தனர். அம்பதி ராயுடு விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். மும்பை அணியில் 20 வயது இளம் வீரரான அனுக்குல் ராய் இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

மலிங்கா, பும்ரா

ரோஹித் ஷர்மா பேக் டு ஃபார்ம்!

இந்த சீஸனில் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை ஃபார்முக்கு வரவைத்தது சென்னையின் பெளலிங் அட்டாக். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே குவின்ட்டன் டிகாக் அவுட். தீபக் சஹாரின் பந்துவீச்சில் 15 ரன்களுக்கு அவுட் ஆனார் சஹார். ஆனால், அதன்பிறகு லீவிஸும், ஷர்மாவும் கூட்டணிபோட்டு சென்னை பெளலிங்கை அலறவைத்தனர். தீபக் சஹாரின் மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறந்தன. பவர்ப்ளேவின் முடிவில் 45 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது மும்பை. 

4 ரன், 1 ரன், 4 ரன் என முதல் மூன்று ஓவர்களை மிகச்சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜனின் நான்காவது ஓவரில் ரோஹித் ஷர்மா இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 8 ஓவர்களுக்குள்ளாகவே ஹர்பஜனின் ஸ்பெல் முடிந்தது. அதன்பிறகு தாஹிர், பிராவோ, சான்ட்னர் என பெளலிங்கை மாற்றினார் கேப்டன் ரெய்னா. சான்ட்னரின் 13-வது ஓவரின் முதல் பந்தில் லீவிஸ் அவுட். 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் லீவிஸ். ஆனால், மறுபக்கம் இந்த சீஸனின் முதல் 50 ரன்களாக 37 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரோஹித் ஷர்மா. இன்னொருபக்கம் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. க்ருணால் பாண்டியா 1 ரன்னுக்கு அவுட். இம்ரான் தாஹிரின் நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரி 1 சிக்ஸர் என மிரட்டினார் ரோஹித். ஆனால், அடுத்த ஓவரே அவர் அவுட். 48 பந்துகளில் 67 ரன்களுக்கு சான்ட்னரின் பந்துவீச்சில் அவுட் ஆனார் ரோஹித்.  20-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் அடித்தது மும்பை.

மலிங்கா, பும்ரா

சென்னையின் சொதப்பல் சேஸிங்!

மலிங்காவின் முதல் ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய வாட்சன் ஐந்தாவது பந்தில் அவுட். ஹர்திக் பாண்டியாவின் நான்காவது ஓவரில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் அவுட். க்ருணால் பாண்டியாவின் ஐந்தாவது ஓவரில் அம்பதி ராயுடு டக் அவுட். மீண்டும் க்ருணால் பாண்டியா வீசிய எட்டாவது ஓவரில் கேதர் ஜாதவ் அவுட். 6 ரன்களில் அவுட் ஆனார் ஜாதவ். இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் ஜாதவ். 8 ஓவர்களின் முடிவில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை. 10-வது ஓவரில் ஷோரி 5 ரன்களுக்கு அவுட். 60 ரன்களுக்கு 5 விக்கெட் காலியானது. ஓப்பனிங் இறங்கி நிதானமாக ஆடிக்கொண்டிருந்த முரளி விஜய்யும் பும்ராவின் பந்துவீச்சில் அவுட். 35 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்தார் விஜய்.

பிராவோவும், சான்ட்னரும் பார்ட்னர்ஷிப் போட்டு பவுண்டரிகள் அடிக்க கொஞ்சம் உற்சாகமானது சென்னை ரசிகப்படை. ஆனால், அந்த நம்பிக்கை கொஞ்ச நேரம்தான். மலிங்காவின் பந்துவீச்சில் பிராவோ அவுட். 17 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்தார் பிராவோ. அடுத்த ஓவர் பும்ரா. சாஹர் டக் அவுட். 17-வது ஓவரில் ஹர்பஜன், சான்ட்னர் என இருவரையும் அவுட் ஆக்கி சென்னையின் கதையை முடித்தார் மலிங்கா. 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சென்னை.

மலிங்கா, பும்ரா

12 மேட்ச்களின் முடிவில் 8 வெற்றி, 16 புள்ளிகள் என இப்போதும் டாப்பில் இருக்கிறது சென்னை. ஆனால், மும்பை, டெல்லி, ஐதராபாத் அணிகள் சென்னையை விரட்டி வந்துகொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை வெற்றிபெற்றால்தான் 20 புள்ளிகளுடன் கெத்தாக ப்ளே ஆஃபில் விளையாடும்!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்