`ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போறேன்!'- வரலாறு படைக்கப்போகும் பெண் சிலிர்ப்பு | Claire Polosak to make history as first female umpire in a men's ODI

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (27/04/2019)

கடைசி தொடர்பு:14:54 (27/04/2019)

`ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போறேன்!'- வரலாறு படைக்கப்போகும் பெண் சிலிர்ப்பு

பெண் நடுவர்


கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதவுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக். ஆடவர் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களநடுவராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. தற்போது நடந்து வரும் வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2 (World Cricket League Division 2) தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில்தான் இவர் நடுவராக பணியாற்றவுள்ளார். ஐசிசி நடத்தும் சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் நடுவராக பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறையாகும். ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ``ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் இன்று வரலாறு படைக்கப்போகிறார்” எனப் பதிவிட்டுள்ளது.

31 வயதாகும் கிளாரி கடந்த 2016 நவம்பர் முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். நவம்பர் 2016-ல் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியே இவரது முதல் போட்டியாகும். ஐசிசி நடத்திய தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20  அரையிறுதிப்போட்டியில் நடுவராக இருந்துள்ளார். தற்போது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் போட்டியில் பெண் நடுவராக களம்காண்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள கிளாரி,  ``நான் ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போகிறேன் என்பதே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராகப் பங்கேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமை அடைகிறேன். பெண் நடுவர்களை முன்னிறுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெண்கள் ஏன் களநடுவராக செயல்படக்கூடாது. இது பெண்களுக்கு எதிராக இருக்கும் பல்வேறு தடைகளை உடைப்பதாக இருக்கும். இது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன்மூலம் அதிகமான பெண்கள் இந்தத் துறைக்கு ஆர்வத்துடன் வருவார்கள்” என்றார்.