கிரீஸ்மன் ஜாம்பவானா..? எப்படி இருக்கிறது `தி மேக்கிங் ஆஃப் லெஜண்ட்'?! | Antoine Griezmann: The Making of a Legend review

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (27/04/2019)

கடைசி தொடர்பு:17:08 (27/04/2019)

கிரீஸ்மன் ஜாம்பவானா..? எப்படி இருக்கிறது `தி மேக்கிங் ஆஃப் லெஜண்ட்'?!

ஒருவேளை, `Antoine Griezmann: The Making of a Legend’ ஹிட் அடித்து விட்டால், இனி மெஸ்ஸி, ரொனால்டோ என வரிசை கட்டி ஜாம்பவான்களை நோக்கி நகர்வார்கள் ஆவணப்பட இயக்குநர்கள்.

கிரீஸ்மன் ஜாம்பவானா..? எப்படி இருக்கிறது `தி மேக்கிங் ஆஃப் லெஜண்ட்'?!

இது ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்ரிகளின் காலம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் இரண்டும் போட்டிபோட்டு கால்பந்து தொடர்பான ஆவணப்படங்களை எடுத்து வருகின்றன. எல்லாவிதமான விளையாட்டுகள் குறித்தும், சாதனையாளர்களைப் பற்றியும் டாக்குமென்ட்ரிகள் எடுக்கப்பட்டாலும், கால்பந்து தொடர்பான படங்களுக்குக் கிடைக்கும் வீச்சு அதிகம். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பந்து கோலோச்சி இருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கிரிஸ்மன்

ஒவ்வொருமுறை உலகக் கோப்பை முடிந்த பிறகும், அந்த டோர்னமென்ட் குறித்த சுவாரஸ்யங்களைத் தொகுத்து ஆவணப்படம் எடுத்து வருகிறது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA). இதனால், ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் கிளப் ஃபுட்பால் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றன. அதைவிட, இதுவரை கால்பந்து உலகக் கோப்பை வென்ற நாடுகளில் நிலவிய Geopolitics History-ஐ அடிப்படையாக வைத்து நெட்ஃபிளிக்ஸ் எடுத்த `Becoming Champions’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஏற்கெனவே தெரிந்த தகவல்கள், ரீப்பீட் ஃபுட்டேஜ் என முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோட் வரை ஒரே டெம்ப்ளேட்டில் இருந்ததால், ஒரு கட்டத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது. இதைப் பார்த்து எதிர்தரப்பு (Prime Video) சுதாரித்துக்கொண்டது.

கிரிஸ்மன்

அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த Make Us Dream, All Or Nothing: Manchester City இரண்டும் அதிரிபுதிரி ஹிட். `Make Us Dream’ கிளப் விசுவாசத்தை விரிவாகப் பேசியது என்றால், `All Or Nothing: Manchester City’ எடிஹாட் மைதானத்தையும், டிரெஸ்ஸிங் ரூமின் இண்டு இடுக்குகளையும், பெப் கார்டியாலோவின் வியூகங்களையும், கெட்ட வார்த்தைகள் உட்பட எதையும் கட் செய்யாமல், அப்படியே காட்டி அப்ளாஸ் அள்ளியது. சும்மா இருக்குமா நெட்ஃபிளிக்ஸ்?! இதோ... உலகக் கோப்பை வென்ற ஃபிரான்ஸ் வீரர் கிரீஸ்மனைப் பற்றி, `Antoine Griezmann: The Making of a Legend’ என்ற டாக்குமென்ட்ரியை களமிறக்கி இருக்கிறது.

`கிரீஸ்மன் லெஜண்டா..? தலைப்பே தப்பா இருக்கே’ என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், `வேர்ல்ட் கப் வின்னர்பா... தாராளமா எடுக்கலாம்’ என்றும் தம்ஸ் அப் காட்டுகின்றனர் சிலர். புறக்கணிப்பு, காயம், அவமானம், தோல்வி, அழுகை, கம்பேக், வெற்றி, கோப்பை, கண்ணீர், முத்தம் என விளையாட்டு தொடர்பான ஆவணப்படத்துக்குரிய இலக்கணம் எதுவும் இதில் மிஸ்ஸாகவில்லை. கிரீஸ்மனைப் பற்றித் தெரிந்தவர்களுக்குப் புதிதாக தெரிந்துகொள்ள எதுவும் இல்லை. ஆனால், அதை ஜவ்வாக இழுக்காமல் ரத்தினச் சுருக்கமாக ஒரு மணி நேரத்துக்குள் சொன்னது ப்ளஸ்.

Antoine Griezmann

உணர்ச்சிகளைக் கலக்காத எந்த வியாபாரமும் வெற்றியடையாது என்பது இயக்குநருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான், சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் உட்பட போட்டிகளில் தோல்வியடைந்து கிரீஸ்மன் கலங்குவதைவிட, பாரிஸ் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் அவரின் சகோதரி சிக்கியபோது கலங்கும் காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கும். இன்னொரு காட்சி...

அத்லெடிகோவில் இருந்து கிரீஸ்மன் வெளியேறப் போவதாகப் புரளி கிளம்பியதை அடுத்து, போட்டி நடந்துகொண்டிருக்கும்போது ரசிகர்கள் அவருக்கு எதிராக ஊளையிடுவார்கள். அப்போது டீகோ கோடின், கிரீஸ்மனை உச்சி மோந்து உடன் நிற்பார். அதற்குக் கைமாறு செய்யும் விதமாக, 2018 உலகக் கோப்பையில் உருகுவேக்கு எதிராக கோல் அடித்தபின் அதைப் பெரிதும் கொண்டாடாமல் நிற்பார் கிரீஸ்மேன். நண்பனின் இந்தச் செயலை நினைத்து நெக்குருகிப் பேசுவார் உருகுவே டிஃபண்டர் டீகோ கோடின். கிளப்பில் நண்பர்களாக இருப்பவர்கள் தேசிய அணிக்காக விளையாடும்போது எதிரெதிர் துருவத்தில் நிற்பதையும், அந்த நட்பைப் பேணிக்காப்பதையும் விவரிக்கும் அந்தக் காட்சி செம!

Antoine Griezmann

இன்று கிரீஸ்மன் வேர்ல்ட் கப் வின்னராக இருக்கலாம். ஆனால், அவரது பால்யம் அப்படியில்லை. Athleticism இல்லை. தனித்திறமை இல்லை. உயரம் இல்லை. ஆனால், ஆர்வம் மட்டும் இருக்கிறது. கிரீஸ்மனும் அவரின் தந்தையும் ஃபிரான்ஸில் ஒவ்வொரு கிளப்பாக ஏறி இறங்குகிறார்கள். எல்லோரும் `பார்க்கலாம்’ எனச் சொல்லி அனுப்புகிறார்கள். கடைசியில் Real Sociedad கிளப்புக்கு ஆள் தேடும் எரிக் ஒல்ஹாட்ஸ், கிரீஸ்மனைக் கண்டெடுக்கிறார். அதன்பின் கிரீஸ்மன் வாழ்க்கை மாறுகிறது. இதை எரிக் ஒல்ஹாட்ஸ் வார்த்தைகளில் கேட்பது அவ்வளவு சுவாரஸ்யம்.

Antoine Griezmann childhood

ஃபிரான்ஸில் இருந்து ஸ்பெயின் குடியேறியபோது எதிர்கொண்ட பிரச்னைகள், ஃபிரான்ஸ் அணியில் இடம்பிடித்தது, சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் தோற்றது, யூரோப்பா லீக் வென்றது, 2018-ல் ரஷ்யாவில் உலகக் கோப்பை வென்றது என கிரீஸ்மன் ப்ரொஃபைலில் இருக்கும் அத்தனை முக்கிய அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அனைத்தும் பிரெஞ்சு மொழியில் இருப்பது மைனஸ். ஒரு quote கூட ஆங்கிலத்தில் இல்லை. தவிர, கிரீஸ்மன் தந்தை, பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என்ற அளவில் சுருக்காமல் எதிரணி வீரர்கள், உறவினர், பத்திரிகையாளர்கள் என பலரிடம் `பைட்’ வாங்கியிருக்கலாம்.

Antoine Griezmann with his sister

சமீபத்தில் வந்த All Or Nothing: Manchester City, Becoming Champions, Sunderland ‘Til I Die, First Team: Juventus என எல்லாமே கிளப் அல்லது அணிகளைப் பற்றியது. ஸ்டீவன் ஜெரார்டுவைப் பற்றிய Make Us Dream மட்டும் அதில் விதிவிலக்கு. ஒருவேளை, `Antoine Griezmann: The Making of a Legend’ ஹிட் அடித்து விட்டால், இனி மெஸ்ஸி, ரொனால்டோ என வரிசை கட்டி ஜாம்பவான்களை நோக்கி நகர்வார்கள் ஆவணப்பட இயக்குநர்கள். ஏற்கெனவே மேட்ச் ஃபுட்டேஜ் உட்பட பல வீடியோக்கள் கைவசம் இருக்கும் என்பதால், சூழலுக்கு தகுந்தாற்போல சிலரது quote, byte-களை மட்டும் அதில் சேர்த்துவிட்டால், ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்ரி தயார் என்பதால், விரைவில் லெஜண்ட்களைப் பற்றிய டாக்குமென்ட்ரிகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்