சி.எஸ்.கே அணியின் 'ஆல் இன் ஆல்' அண்ணா இவர்தான்! #CSK | Interview with csk dressing room incharge Kothandam

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (28/04/2019)

கடைசி தொடர்பு:07:05 (03/05/2019)

சி.எஸ்.கே அணியின் 'ஆல் இன் ஆல்' அண்ணா இவர்தான்! #CSK

சி.எஸ்.கே அணியின் 'ஆல் இன் ஆல்' அண்ணா இவர்தான்! #CSK

ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம், இந்த அணிக்குக் கொஞ்சம் அதிகம். சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காணவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குப் படையெடுத்தது நினைவிருக்கலாம். கேப்டன் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் வைரல் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் தோனி மட்டுமல்ல, அவருடன் இன்னொருவரும் கிரவுண்டுக்குள் என்ட்ரி தருவார். அவர்தான் சி.எஸ்.கே-வின் `ஆல் இன் ஆல் அண்ணா’ கோதண்டம்!  #CSK

#CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களுக்கு, கோதண்டம் பரிச்சயமான முகமாகத்தான்  இருப்பார். சூப்பர் கிங்ஸ் ஆவணப்படத்தில், இன்ஸ்டாகிராம் வீடியோக்களில், பயிற்சி ஆட்டங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில், தோனி களமிறங்கும்போது கோதண்டமும் கூடவே வருவார். காதைக் கிழிக்கும் ரசிகர்களின் ஆரவாரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், பேட்டிங் கிட்டை இறக்கிவைத்துவிட்டு, பயிற்சி ஆட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளனவா என ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு பெவிலியன் திரும்புவார் கோதண்டம். இவர் சென்னை சூப்பர் கிங்ஸின் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ். 


அணி வீரர்களுடனே அதிகம் பயணிக்கிறாரே, இவர் செய்யும் வேலை எப்படியானது, சி.எஸ்.கே-வின் பயிற்சி ஆட்டங்களில் உள்ள சுவாரஸ்யங்கள் என்ன... இன்னும் கொஞ்சம் சி.எஸ்.கே பற்றியும் வீரர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள சேப்பாக்கம் கிளம்பினோம்.  பயிற்சிக் களத்தில் இருந்தவரை இடைவெளியின்போது சந்தித்தோம்.


``சி.எஸ்.கே டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜாக 11 ஆண்டுகள்... இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?''

``1992-ல இந்தியா சிமென்ட்ஸ்ல வேலை கிடைச்சது. இந்த நிறுவனத்தை சார்ந்து இருக்கும் குருநானக் கிரிக்கெட் கிரவுண்டு இன்சார்ஜா வேலையைத் தொடங்கினன். U 23, ரஞ்சி டிராபி தொடர்கள்ல வருஷத்துக்கு குறைஞ்சது 175 போட்டிகளுக்கு கிரவுண்டு இன்சார்ஜா வேலை பண்ணிருக்கேன். 26 வருஷமா இந்தத் துறையில இருக்கேன். ஆனா, ஐபிஎல் வந்தப்புறம் சில மாற்றங்கள். ஐ.பி.எல் முதல் சீசன்ல இருந்து சி.எஸ்.கே ஹோட் கிரவுண்டு  டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜா இருக்கேன். 2008 ஏப்ரல் 23. சேப்பாக்கத்துல நடந்த முதல் ஐ.பி.எல் போட்டி சென்னை Vs மும்பை. சேப்பாக்கத்துல ஒரு அணி விளையாடுறது வழக்கமானதுதானு அதுக்குத் தேவையான எல்லாத்தையும் தயாரா வெச்சிருந்தோம். ஆனா, மொத சீசன்லயே சி.எஸ்.கே-வுக்கு ஃபேன்ஸ் அதிகம். மொதல்ல பேட்டிங் செஞ்ச சி.எஸ்.கே 208 ரன்கள் வெளுத்துட்டாங்க.  `சி.எஸ்.கே... சி.எஸ்.கேனு...' ரசிகர்கள் கொண்டாடினதை மறக்க முடியாது. தொடர்ந்து 11 வருஷமா நான் இந்த வேலையில இருக்கேன். அணி நிர்வாகமும் எந்த மாற்றமும் சொல்லலை. இந்த நம்பிக்கையைத் தக்கவெச்சுக்கணும்னு தோணுது.''

#CSK


``டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்... எப்படியான வேலை இது?''

``பயிற்சி நேரங்கள்லயும், போட்டி நடக்கிற நாள்லயும்தான் முக்கியமான வேலைகள் இருக்கும். போட்டி நடக்கும் நேரத்துக்கு ஏத்த மாதிரி சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சிக்கு வருவாங்க. 4 மணிக்கு போட்டினா, 3 மணியில இருந்து பயிற்சி தொடங்கும். 8 மணி போட்டியினா அதுக்கு ஏத்த நேரத்துல பயிற்சி நடக்கும். நான் பயிற்சி நேரத்துக்கு நாலு மணி நேரம் முன்னரே மைதானத்துக்கு வந்துடுவன். ஒவ்வொரு ப்ளேயருக்குமான பேட்டிங் கிட், பால்ஸ், டிரிங்க்ஸ் பாக்ஸ், நெட் பிராக்ட்டிஸ் அப்போ வெளில இருந்து வர வீரர்களுக்கான அரேஞ்மென்ட்ஸ்னு எல்லாத்தையும் தயார வெச்சுடணும். பயிற்சில எந்த இடையூறும் வந்துடக் கூடாதுனு எப்பவுமே கவனமா இருக்கணும்.

மூணு முதல் நாலு மணி நேரம் பயிற்சி நடக்கும். பயிற்சி இடைவெளியில கரெக்டான நேரத்துக்கு டிரிக்ங்ஸ் தரணும். பயிற்சி முடிஞ்சதும் திரும்பவும் பேட்டிங், பவுலிங் கிட்டைச் சரிபார்த்து எடுத்துட்டுப் போகணும். பயிற்சி நேரத்துல இருக்கிற வேலைதான் போட்டி நடக்கிறப்பவும். ஒவ்வொரு ப்ளேயருடைய கிட்டையும் ரெடியா டிரெஸ்ஸிங் ரூம்ல வைக்கணும். குறிப்பா, கிளவுஸஸ் செக் பண்ணணும். கண்ணுக்குத் தெரியாத எறும்பு, பூச்சிங்க இல்லாம சுத்தமா இருக்கானு செக் பண்ணணும். கிட் பேக்ல இருக்கும் ஒவ்வொரு பொருளும் முக்கியமானது. இதுதவிர, மைதானத்துல இருக்கிறப்போ வீரர்களுக்குத் தேவையான வேற எந்த உதவினாலும் செஞ்சிடுவன்.”


``இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டபோது சி.எஸ்.கே விளையாடாதது பற்றி...''

``ரொம்பவும் டல்லா இருந்தது. வருஷா வருஷம் சம்மர் வந்துடுச்சுனா ஐ.பி.எல் தொடருக்கான தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிடும். அந்த ரெண்டு வருஷம் எதுவும் நடக்கல. உண்மைய சொல்லணும்னா, சென்னை அணியைவிட சென்னை ரசிகர்கள ரொம்ப மிஸ்பண்ணினேன். ரெண்டு வருஷ இடைவெளிக்கு அப்புறம் சேப்பாகத்துக்குத் திரும்ப விளையாட வந்தாங்க சி.எஸ்.கே. ஸ்டேடியம் வெளில பிரச்னை போயிட்டிருந்தாலும், ரசிகர்களுக்கானதா இருந்துச்சு அந்த வெற்றி. முதல் போட்டியில கொல்கத்தாவ ஜெயிச்சிட்டுப் போறப்ப யாருமே எதிர்பார்க்கல, திரும்பவும் சேப்பாகத்துல விளையாட மாட்டோம்னு. சில காரணங்களால சென்னையில தொடர முடியல. நானும் ரொம்ப வருத்தப்பட்டேன். அப்பதான் பூனேவை ஹோம் கிரவுண்டா அறிவிச்சாங்க. சேப்பாக்கத்துல மட்டும்தான் நான் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்னு நினைச்சுட்டு இருந்தப்ப, `ஹோம் கிரவுண்டு எங்க இருந்தா என்ன, பூனே மைதானத்துலையும் நீதான் இன்சார்ஜ்னு' சொல்லி என்னையும் கூப்பிட்டுப்போனாங்க. இதைவிட வேற என்ன வேணும்? பூனே போயிட்டு தொடரையும் ஜெயிச்சிட்டோமே!''

#CSK


``கிரிக்கெட்டைப் பொறுத்தவரை `டிரெஸ்ஸிங் ரூம்' கதைகள் ஏராளம் இருக்கும். அப்படி சுவாரஸ்யமான கதைகள் ஏதாவது...''

``களத்துல சிங்கமா இருக்கிற வீரர்கள் எல்லாம் மற்ற நேரத்துல ரொம்ப ஜாலி. போட்டி முடிஞ்சப்பறம் வெற்றியோ தோல்வியோ யாரும் யார்கிட்டையும் கடுகடுத்ததில்ல. `அடுத்து என்ன?' என்பதைப் பற்றிதான் பேசிட்டிருப்பாங்க. பிராவோ சார், சாம் பில்லிங்ஸ் இவங்க இருந்தாலே இடம் கலகலப்பா இருக்கும். போட்டோகிராபி மேல பில்லிங்ஸ் சாருக்கு ரொம்ப விருப்பம். பறக்கும் கேமராவை வெச்சு எப்போமே எதையாவது படம்பிடிச்சிட்டு இருப்பாரு. வம்பு பண்றது, ஜாலியா பேசுறதுனு எல்லாமே இயல்பா இருக்கும். ஆனா, பயிற்சி நேரத்துல தோனி சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இந்த வருஷம் திரும்பவும் சென்னை வந்திருக்காங்க.  டிரெஸ்ஸிங் ரூம் வந்தவுடனே, `ஹாய் அண்ணா. வி ஆர் பேக்!'னு ரெய்னா சார் சந்தோஷப்பட்டார். இந்த முறை 7 போட்டிகள்லயும் விளையாடி வெற்றியோடு போகணும்னு பயிற்சி எடுத்துட்டிருக்காங்க. எங்க இருந்தாலும், சேப்பாக்கம் எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பெஷல்தான்.''


``தோனி, ரெய்னா என மொத்த சி.எஸ்.கே அணியும் உங்களை `அண்ணா’னு அழைப்பாங்களாமே?''

``ஹாஹா... ஆமா உங்களுக்கு யாரு சொன்னது? தோனி சாருக்கு, கொஞ்சம் தமிழ் பேசவரும். நாம சொல்றதைப் புரிஞ்சுப்பாரு. தோனி, ரெய்னா சார்ல இருந்து தம்பி சாம் பில்லிங்ஸ் வரைக்கும் எல்லாரும் `அண்ணானு'தான் கூப்பிடுவாங்க. என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்பாங்க. அதனால `ஆல் இன் ஆல் அண்ணா'னு செல்லமா கூப்பிடுவாங்க. ஐ.பி.எல் சீசனுக்காக ஒவ்வொரு முறை சேப்பாக்கம் வரும்போதும், தோனி சார் என் குடும்பத்தைப் பற்றிக் கேட்க மறந்ததில்லை. என் மனைவி, புள்ளைங்க எல்லாருமே தீவிர சென்னை ரசிகர்கள்தான். நானும் இந்த அணிக்காக வேலை செஞ்சுட்டு இருக்கேன்கிறதே மறந்துட்டு, ரசிகனா மாறிட்டேன்.''

கடைசியா, `Be CSK, by CSK' என்ற பன்ச்சோடு முடித்தார் கோதண்டம்.

 

இது போன்ற சுவாரஸ்ய பேட்டிகளை உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்...! 
https://t.me/vikatanconnect

 


டிரெண்டிங் @ விகடன்