கடைசி மூன்று நாள்... ஐந்து போட்டிகள்... ப்ளே ஆஃப் நுழையப்போவது யார்? #IPL2019 | Qualification scenarios: Four-way race for last playoff berth

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (03/05/2019)

கடைசி தொடர்பு:18:15 (03/05/2019)

கடைசி மூன்று நாள்... ஐந்து போட்டிகள்... ப்ளே ஆஃப் நுழையப்போவது யார்? #IPL2019

கடைசி மூன்று நாள்... ஐந்து போட்டிகள்... ப்ளே ஆஃப் நுழையப்போவது யார்? #IPL2019

டப்பு ஐபிஎல் தொடர், இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் என ஏற்கெனவே மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. மீதம் இருப்பதோ ஓர் இடம். அந்த இடத்துக்கு 4 அணிகள் கடுமையாக மோத உள்ளன. கோலி தலைமையிலான ஆர்சிபி, பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. ராஜஸ்தான் அணிக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் என்றாலும், மற்ற அணிகளின் செயல்பாடுகளை வைத்து, அந்த அணிக்கு இன்னும் சில வாய்ப்புகள் தூரத்தில் தெரிகின்றன. 

இந்த மோதல் எல்லாம், இன்னும் தகுதி பெறாத அணிகளுக்கு மட்டுமல்ல. ஏற்கெனவே தகுதிபெற்ற சென்னை, மும்பை டெல்லி அணிகளும் முதல் இரண்டு இடத்தினைப் பிடிக்க கடுமையாகக் களத்தில் மோதவுள்ளன. காரணம், முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் (குவாலிஃபையர் 1) வெற்றிபெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். ஒருவேளை தோற்றாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றின் கடைசி மூன்று நாளில் நடைபெறும் 5 போட்டிகளின் முடிவுகள் எந்த அணிக்குச் சாதகமாக அமையும்? அதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

குவாலிஃபையரில் மோதிக்கொள்ளும் அணிகள் எவை? ஒரு சின்ன அலசல். #IPL2019

குறிப்பு: (H) - ஹோம் கிரவுண்டு ;  (A) - அவே கிரவுண்டு

குவாலிஃபையரில் யார்? சென்னை Vs மும்பை Vs டெல்லி

சென்னை சூப்பர் கிங்ஸ் 

கடைசிப் போட்டி: Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (A) மே 5 

#IPL2019

18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாபுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்றால், 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். ஒருவேளை பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தால், கடைசிப் போட்டியில் விளையாடும் டெல்லி, மும்பை அணிகளும் தோல்வியைச் சந்தித்தால்  மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸின் 'குவாலிஃபையர் 1' வாய்ப்பு உறுதியாகும். மாறாக, மும்பை, டெல்லி அணிகள் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று, சென்னை பஞ்சாபிடம் தோற்றால், மூன்று அணிகளும் தலா 18 புள்ளிகளைப் பெற்றிருக்கும். இந்நிலையில், நெட் ரன்ரேட் (NRR) கணக்கின்படி, முதல் இரண்டு இடங்கள் முடிவுசெய்யப்படும். 

மும்பை இந்தியன்ஸ் 

கடைசிப் போட்டி: Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - (H) மே 5 

#IPL2019

வான்கடேவில் நடைபெற்ற சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப்புக்கு என்ட்ரியானது. +0.321 ரன் ரேட்டுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் மும்பை, குவாலிஃபையரில் விளையாடும் முனைப்பில் உள்ளது. கொல்கத்தாவுடனான கடைசி லீக் போட்டியில் மும்பை தோல்வியடைந்து, ராஜஸ்தானை டெல்லி வீழ்த்தினால் மும்பை இந்தியன்ஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படும். மறுபுறம், டெல்லி கேப்பிடல்ஸின் நெகட்டிவ் ரன்ரேட் மும்பைக்குச் சாதகமாக அமையலாம். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெறுமாயின், டெல்லியைப் பின்னுக்குத்தள்ளி புள்ளிப் பட்டியலில் மும்பை முன்னேறும். 

டெல்லி கேப்பிடல்ஸ்

கடைசிப் போட்டி: Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - (H) மே 4

   #IPL2019

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப்புக்குத் தகுதிபெற்றிருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ், கோப்பைக் கனவை நிஜமாக்கக் காத்திருக்கிறது. நல்ல ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்த கேப்பிடல்ஸ், சென்னைக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரன் ரேட்டும் சரசரவெனக் குறைந்தது. கடைசிப் போட்டியில், அதிக ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தால், டெல்லி கேப்பிடல்ஸ் குவாலிஃபையரில் பங்கேற்பது உறுதி.

கடைசி வாய்ப்பைப் பெறப்போவது எந்த அணி?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 

கடைசிப் போட்டி: Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - (A) மே 4

#IPL2019

எட்டு அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அதிக ரன் ரேட் (+0.653) வைத்திருப்பது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு ப்ளஸ். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், ஹைதராபாத் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துக்கொள்ளும். ஆனால், தற்போது 12 புள்ளிகள் வைத்திருக்கும் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே ஹைதராபாத்துடன் `டை' ஆகும். இந்நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முடிவுசெய்யப்படும். 

ஒருவேளை, கடைசிப் போட்டியில் ஹைதராபாத் தோல்வியடைந்தால், பிளே ஆஃப்புக்கு என்ட்ரியாவது கடினம். இந்நிலையில், டெல்லியிடம் ராஜஸ்தான் தோல்வியடைந்து, பஞ்சாப், கொல்கத்தா அணிகள் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற வேண்டும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃபுக்குச் செல்லும் நான்காவது அணி தேர்வுசெய்யப்படும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

Vs பஞ்சாப் - (A)  மே 3 ; vs மும்பை - (A)  மே 5

#IPL2019

பிளே ஆஃபுக்குத் தகுதி பெற, மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த அணி பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தால், கொல்கத்தா அணிக்கு வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். மாறாக, ஹைதராபாத் அணி வெற்றிபெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. கொல்கத்தா அணிக்கு +0.100 ரன்ரேட் இருக்கிறது. கொல்கத்தா அணி ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும் மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கவேண்டியதுதான். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 

Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (H) மே 3 ; சென்னை சூப்பர் கிங்ஸ் - (H) மே 5

#IPL2019

பஞ்சாப் அணிக்கும் கிட்டத்தட்ட கொல்கத்தா அணிக்கு இருக்கும் நிலைதான். 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி அவசியம். ஆனால், பஞ்சாப் அணிக்கு ரன்ரேட்டில் (-0.296) கவலைக்கிடமாக இருக்கிறது. ஒருவேளை பஞ்சாப் கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால், ஹைதராபாத் அணியுடன் ரன்ரேட் யுத்தம் நடத்தி, உள்ளே செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மைனஸ் ரன்ரேட் இருப்பதால் பஞ்சாப் அணியின் நிலை கொஞ்சம் சிக்கல்தான். 

ராஜஸ்தான் ராயல்ஸ் 

கடைசி போட்டி: Vs டெல்லி கேப்பிடல்ஸ் - (A) மே 4

#IPL2019

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற மீதம் இருக்கும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். மேலும், ஹைதராபாத் அணி பெங்களுரு அணிக்கு எதிராகத் தோற்க வேண்டும். கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களுக்கு இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும். இப்படி நடந்தால், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் 12 புள்ளிகளுடன் இருக்கும். ராஜஸ்தான் 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குச் செல்லும். ஹைதராபாத் வெற்றிபெற்றாலோ கொல்கத்தா அல்லது பஞ்சாப் அணி ஏதாவது ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலோ ராஜஸ்தான் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பறிபோயிவிடும்.

நான்காவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்பதை மீதம் இருக்கும் 5 போட்டிகள் தீர்மானிக்கும். ப்ளே ஆஃப் விளையாடும் 4-வது அணி எதுவாக இருக்கும் மக்களே... உங்களின் கணிப்புகளைக் கீழே பதிவிடுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்