`நீங்கள் எப்போதும் ஸ்பெஷலானவர்கள்!' - ஆர்சிபி ரசிகர்களுக்கு கோலி, டிவிலியர்ஸின் உருக்கமான மெசேஜ் | Virat Kohli, AB de Villiers promise fans to turn it around next year

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (04/05/2019)

கடைசி தொடர்பு:17:51 (04/05/2019)

`நீங்கள் எப்போதும் ஸ்பெஷலானவர்கள்!' - ஆர்சிபி ரசிகர்களுக்கு கோலி, டிவிலியர்ஸின் உருக்கமான மெசேஜ்

ஐ.பி.எல் போட்டியில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாததால் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டுள்ளார். 

கோலி

ஐ.பி.எல் போட்டியின் லீக் ஆட்டம் கிட்டத்தட்ட இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ப்ளே ஆஃப் பரபரப்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது ஐ.பி.எல். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த ஆர்.சி.பி அணி, இம்முறை `ஈசாலா கப் நமதே' என்ற முழக்கத்துடன் களமிறங்கியது. ரசிகர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் இம்முறை ஒவ்வோர் ஆட்டத்திலும் போராடியது.

விராட் கோலி

அந்த அணிக்கு பேட்டிங் பெருமளவில் கைகொடுத்தாலும், ஃபீல்டிங், பௌவுலிங்கில் ஏற்பட்ட தொடர் சொதப்பல் காரணமாக தோல்விகளை மட்டுமே அந்த அணிக்குக் கிடைத்தது. இந்தத் தொடர்தோல்விகளின் போதிலும், ஆர்.சி.பி ரசிகர்கள் கோலியை விட்டுக்கொடுக்கவில்லை. `வி ஆர் வித் யூ கோலி' என்று சமூகவலைதளங்களில் தங்கள் எண்ண ஓட்டத்தைப் பதிவிட்டிருந்தனர். கோலியின் பேட்டிங் இம்முறை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. `வேல்டு கப்ல பாத்துக்காலம்' என்றபடி கோலிக்கு ஆதரவாகவே அவரது ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், அப்படிப்பட்ட ரசிகர்களிடம், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லமுடியாததால் மன்னிப்புகோரியுள்ளனர் கோலியும், டி.வில்லியர்ஸூம்.

ஆர்சிபி கேப்டன்

அவர்கள் பேசியதை அந்த அணி சார்பில் ட்விட்டரில் வீடியோவாக வெளியிடப்ட்டுள்ளது. டிவிலியர்ஸ் பேசுகையில், ``இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. கடைசியாக நாங்கள் ஆடிய ஆட்டத்தை எங்களால் மறக்கமுடியாது. எங்களது நிலையற்ற ஆட்டத்துக்காக, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சிறப்பாக ஆடுவோம் என நம்பினோம். ப்ளீஸ் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள். உங்கள் ஆதரவுதான் எங்களை முன்னோக்கி நகர்த்துகிறது'' என்றார்.

கோலி பேசுகையில், `ஒரு ஆட்டம் இந்த சீசனில் எங்களுக்கு மீதமிருக்கிறது. உங்களுக்கு மட்டுமல்லாது, எங்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இதிலிருந்து மீண்டு வருவோம். அடுத்த சீசனில் எல்லாமே மாறும். மழையின் காரணமாக கடந்த ஆட்டம் பாதிக்கப்பட்ட போதும், நீங்கள் ஸ்டேடியத்தில் அமர்ந்துகொண்டு எங்களுக்கு வரவேற்பு அளித்தீர்கள். இது எங்களுக்கு ஸ்பெஷல், எங்கள் மனதில் எப்போதும் உங்கள் அன்பு நிறைந்திருக்கும். நன்றி. நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த ரசிகர்கள்'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.