"37 பந்துல சென்சூரி அடிச்சது நான்தான்... ஆனா பேட் சச்சினோடது!"- சுவாரஸ்ய பின்னணி சொல்லும் அப்ரிடி | Shahid Afridi reveals he used Sachin Tendulkar's bat for 37-ball century

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (05/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (05/05/2019)

"37 பந்துல சென்சூரி அடிச்சது நான்தான்... ஆனா பேட் சச்சினோடது!"- சுவாரஸ்ய பின்னணி சொல்லும் அப்ரிடி

அப்ரிடி


1996-ல் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தார் அப்ரிடி.  டி-20 தொடர்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார் அப்ரிடி. அந்தப்போட்டியில் தான் பயன்படுத்திய பேட், போட்டிக்கு முன்னர் சகவீரர்களிடம் தனது ஆசையை வெளிக்காட்டியது என ஏராளமான விஷயங்களைத் தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்ஜரில் குறிப்பிட்டுள்ளார் அப்ரிடி.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  சமீர் ஃபோர் நேஷன்ஸ் கப் தொடரில் விளையாடுவதற்காகக் கென்யா சென்றது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, கென்யா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடைபெற்றது. பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் முஸ்தாக் அகமது காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக 16 வயதான இளம்கிரிக்கெட் வீரரான அப்ரிடி அணியில் சேர்க்கப்பட்டார். இதுதான் அப்ரிடிக்கு முதல் போட்டி. இந்தப்போட்டியில் இலங்கையில் டாப் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கிய அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போடியில் அதிவேக சதமாக பதிவானது.

இதுகுறித்து தனது சுயசரிதை புத்தகத்தில், “இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டை வக்கார் யூனிஸிடம் கொடுத்திருந்தார். வக்கார் யூனிஸ் அந்த பேட்டை என்னிடம் கொடுத்தார். அதைக்கொண்டு தான் பயிற்சியில் ஈடுபட்டேன். எனது முதல் சதம் அந்த பேட்டாலே வந்தது. இந்தப்போட்டிக்கு முன்பாக எனது ரூம் மேட்டான கபீரிடம் “ எனக்கு ஒரு கனவு இருக்கு ஜெயசூர்யா, முரளிதரன், தர்மசேனா பந்துவீச்சில் சிக்ஸர்கள் விளாச வேண்டும். அதுவும் மிகப்பெரிய சிக்ஸர்கள். நீ எனக்காக வேண்டிக்கொள் சகோதரா!..  எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

16வயதில் அஃப்ரிடி அடித்த அந்த அதிரடி சதம் அனைவராலும் இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் அந்த சதத்தையும் தான் 16 வயதில் அடிக்கவில்லை. அப்போது எனக்கு 19 வயது இருக்கும். நான் 1975-ல் பிறந்தேன். ஆனால் அதிகாரிகள் எனது வயதைத் தவறாக குறிப்பிட்டுள்ளனர் என இந்தப்புத்தகத்தில் அந்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்.