``கோலியை மற்ற வீரர்கள் பின்பற்ற வேண்டும்!” - கேப்டன்ஷிப் குறித்து மனம் திறக்கும் வெட்டோரி | Vettori talks about virat kohli captaincy

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:01 (07/05/2019)

``கோலியை மற்ற வீரர்கள் பின்பற்ற வேண்டும்!” - கேப்டன்ஷிப் குறித்து மனம் திறக்கும் வெட்டோரி

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில், கோலியின் ஆர்.சி.பி கடைசி இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பேட்ஸ்மேனாக நீங்க வேற லெவல் பாஸ். ஆனால், கேப்டன் கோலியை எப்போது பார்ப்போம் எனத் தொடர்ச்சியாக பலர் விமர்சனம் செய்துவந்தனர். ஆனால், ஆர்.சி.பி-யின் முன்னாள் பயிற்சியாளரும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான டேனியல் வெட்டோரி, கோலிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 

கோலி

ஆர்.சி.பி அணிக்கும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. ஒரு மூத்த வீரராக ஆர்.சி.பி அணியில் இருந்தவர், பின்னர் அந்த அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அணியின் மோசமான செயல்பாடு காரணமாக, 2018 -ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் வந்தார். 

வெட்டோரி

இந்நிலையில், தனியார் கிரிக்கெட் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வெட்டோரி, கோலியின் கேப்டன்ஷிப் குறித்துப் பேசினார். அப்போது அவர், ``நான் கோலியிடம் உரையாடும்போதோ அல்லது மற்ற பயிற்சியாளர்கள் அவருடன் உரையாடுபோதோ, அவர் அதில் சிறந்தவற்றை எடுத்து பணியாற்றுவார். நாங்கள், பெரும்பாலும் எண்களின் அடிப்படையில் உரையாட மாட்டோம். எங்களின் உள்ளுணர்வில் பட்டதைப் பேசுவோம். ஆட்டத்தைப் புரிந்துகொள்வது தொடர்பாகப் பேசுவோம். விராட் கோலியிடம் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லும்போது, அதை அவர் திறந்த மனதுடன் கவனிப்பார். அதை எங்கு பயன்படுத்தலாம் என்பதுகுறித்து விவாதிப்பார். அதுதான் அவரை நல்ல கேப்டனாக மாற்றியது. 

கோலி

களத்தில் அவர் ஆக்ரோஷமாகச் செயல்படுவார். வெற்றிபெறுவதுதான் அவரது ஒரே நோக்கமாக இருக்கும். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவரைச் சொல்லலாம். அணியில் இருக்கும் அனைவரும் அவரது உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அதேபோன்று, ஒரு போட்டிக்காக அவர் தயாராகும் விதமும் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒன்று. இவைதான் தலைமைப் பண்பில் முக்கியப் பங்காற்றும்” என்றார். 

கோலியின் கேப்டன்ஷிப் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், வெட்டோரி அவருக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், கோலி பாசிட்டிவ் மனநிலையில் இருப்பது முக்கியம் எனவும் இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.