மந்தானாவின் 90; கடைசி ஓவரில் அதிரடி காட்டிய கவுர் - த்ரில் வெற்றிபெற்ற ட்ரெயல்ப்ளேசர்ஸ் #WIPL | Trailblazers clinch last ball victory against supernovas

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:50 (07/05/2019)

மந்தானாவின் 90; கடைசி ஓவரில் அதிரடி காட்டிய கவுர் - த்ரில் வெற்றிபெற்ற ட்ரெயல்ப்ளேசர்ஸ் #WIPL

#WIPL

ஐபிஎல் சீசன் இன்னும் முடிந்திடாத நிலையில், கடைசி வாரத்தில் நடைபெறும் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு இடையே, பெண்களுக்கான டி20 சேலஞ்ச் நேற்று தொடங்கியது. ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான  ட்ரயல்பிளேஸர்ஸ் அணியும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதின. இளம் வீராங்கனை ஸ்மிரிதி, 90 ரன்கள் விளாச, பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது ட்ரெயல்ப்ளேசர்ஸ். #WIPL

#WIPL

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணிக்கு ஸ்மிரிதி மந்தானா, சூசி பேட்ஸ் இணை ஓப்பனிங்கில் களமிறங்கினர். போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, அனுஜா பாடில் பந்தில் சூசி பேட்ஸ் வெளியேறினார். ஒன் டவுன் இறங்கிய ஹர்லின் தியோல்- ஸ்மிரிதி கூட்டணி, ரன் குவிப்பில் ஈடுபட்டது. 18-வது ஓவர் வரை களத்தில் நின்ற இந்த இணை, அணியின் ஸ்கோரை 125-க்குக் கொண்டுசென்றனர். 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய ஸ்மிரிதி, செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்த்தபோது ராதா யாதவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 67 பந்துகளில் 90 ரன்கள். ஸ்மிரிதியின் ஆட்டத்துக்கு ரசிகர்களின் ஆரவாரம் அவர் பெவிலியன் திரும்பும் வரை அடங்கவில்லை. 20 ஓவர் முடிவில், ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணி, 140/5

#WIPL

ஜெமிமா ராட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், நடாலி ஷிவர் இருக்கும் பேட்டிங் லைன் - அப் கொண்ட சூப்பர் நோவாஸ், சேஸிங்கை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து வீராங்கனை எக்லஸ்டோன் பந்துவீச்சில், சூப்பர் நோவாஸ் பேட்ஸ்வுமன்கள் தடுமாறினர். 4 ஓவரில், 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார், எக்லஸ்டோன். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் தாக்குப்பிடித்து ஆட, 46 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்றபோது, அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் விளாசி, ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணிக்குப் பயம் காட்டினார் கவுர். கடைசிப் பந்தில் non-striking என்டில் இருந்த துஹுஹு ரன் அவுட்டாக, இரண்டு ரன் வித்தியாசத்தில் ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணி வெற்றிபெற்றது. மே 8-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில், டிரெயில்ப்ளேசர்ஸ் vs வெலோசிட்டி அணிகள் மோதுகின்றன.