``சுயநலத்துக்காக பல வீரர்களின் வாழ்க்கையை அழித்தவர்!” - அஃப்ரிடியை வெளுத்து வாங்கிய பாக். வீரர் | I have a fair few stories to tell  Mr Afridi -Imran Farhat

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (07/05/2019)

கடைசி தொடர்பு:15:48 (07/05/2019)

``சுயநலத்துக்காக பல வீரர்களின் வாழ்க்கையை அழித்தவர்!” - அஃப்ரிடியை வெளுத்து வாங்கிய பாக். வீரர்

இம்ரான்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி தனது சுயசரிதைப் புத்தகத்தின் மூலம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார். `தி கேம் சேஞ்ஜர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகத்தில் மியான் தத், வக்கார் யூனிஸ், கம்பீர் உடனான மோதல் குறித்து விமர்சனம் செய்துள்ளார். சச்சின் பேட்டில்தான் அதிவேக சதம் அடித்தேன் என்று இந்திய ரசிகர்களை கவர முயன்றார். அந்த அதிரடி சதத்தையும் 16 வயதில் அடிக்கவில்லை 20 வயதில்தான் அடித்தேன் எனச் சுயசரிதைப் புத்தகத்தில் உண்மையைப் போட்டு உடைக்கச் சர்ச்சையில் சிக்கினார் அஃப்ரிடி. இப்படி சமூகவலைதளத்தில் அஃப்ரிடி ஹாட் டாப்பிக்காக மாற, இதெல்லாம் ஒரு பிழைப்பா என்ற டோனில்  ட்விட்டரில்  அஃப்ரிடியை வெளுத்து வாங்கியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத். 

அப்ரிடி

இம்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஃப்ரிடியின் புதிய புத்தகத்தை நான் படித்தபோதும் அதுகுறித்து சிலர் பேசும்போதும் எனக்கு வெட்கமாக இருந்தது. ஒரு கிரிக்கெட்டர் தனது உண்மையான வயதை மறைத்து விளையாடிவிட்டு தற்போது நல்லவர் போல் வந்து மதிப்புமிக்க வீரர்கள் குறித்து விமர்சித்துப் பேசிவருகிறார். இந்த அஃப்ரிடி குறித்த பல கதைகள் என்னிடம் இருக்கிறது. அதேபோல் நிறைய வீரர்களிடம் அஃப்ரிடியின் கதைகள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் முன்வந்து இந்த சுயநலவாதியின் உண்மை முகத்தைக் காட்ட வேண்டும். அவரது சுயநலத்திற்காக ஏராளமான கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அழித்துள்ளார். ஒரு துறவிபோல் காட்சியளிக்கும் அஃப்ரிடி குறித்து ஏராளமான கதைகள் சொல்ல இருக்கிறது. தன்னிடம் இருக்கும் திறமைக்கு அவர் அரசியல்வாதியாகலாம்” எனக் காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.