தவறான நோ பாலால் கோலி ஆங்கிரி; அம்பயர் அப்செட் - கதவுகளை உடைத்து தண்டம் கட்டிய அம்பயர் | Umpire Nigel Llong kicks door during IPL game

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (07/05/2019)

கடைசி தொடர்பு:17:43 (07/05/2019)

தவறான நோ பாலால் கோலி ஆங்கிரி; அம்பயர் அப்செட் - கதவுகளை உடைத்து தண்டம் கட்டிய அம்பயர்

விராட் கோலி

நடப்பு ஐபிஎல் தொடரில் களநடுவர்களின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பல போட்டிகளில் நடுவர்களின் தவறான கணிப்பால் போட்டி ஒரு தரப்பினருக்கு சாதகமாக முடிந்துள்ளது. லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசிப் பந்தை மலிங்கா நோ பாலாக வீசினார்.  கிரீஸுக்கு வெளியே காலை வைத்து மலிங்கா பந்துவீசினார் அது நடுவர்களால் கவனிக்கப்படவில்லை. போட்டி மும்பைக்குச் சாதகமாக முடிந்தது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். டிவி-யில் காட்டப்பட்ட ரீப்ளேவில் மலிங்கா காலை வெளியில் வைத்து வீசியது தெரியவந்தது. 

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது சாண்ட்னர் ஃபுல் டாஸாக வந்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார். அப்போது முதல் கள நடுவர் நோ பால் என கையைத் தூக்கினார். ஆனால், ஸ்கோயர் அம்பையர் நோ பால் இல்லை எனக் கூறியதால் நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனி கோபத்துடன் களத்துக்கு வந்தவர் முதலில் நீங்கள் ஏன் நோ பால் அறிவித்தீர்கள் எனக் கேட்டார். இதுவும் ஐபிஎல்லில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தோனி

பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை நோபால் என அறிவித்தார் அம்பயராக செயல்பட்ட நிகெல் லாங். கிரீஸுக்கு வெளியே காலை வைத்து பந்துவீசியதால் நோபால் அறிவிக்கப்பட்டது என்றார். ஆனால், டிவி ரீப்ளேவில் பார்த்தபோது கிரீஸ் மீது காலை வைத்து பந்துவீசியது தெரியவந்தது. இதனால் அதிருப்தியடைந்த கோலி , உமேஷ் யாதவ் இருவரும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டு பெவிலியன் சென்ற அம்பயர் நிகெல் லாங் மைதானத்தில் இருந்த கதவை வேகமாக எட்டி உதைத்தார். இதில் கதவுகள் சேதமானது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நிர்வாகம் சார்பில் நிகெல் லாங்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

உமேஷ் யாதவ்

இந்த நிலையில், நடுவரின் செயலை பிசிசிஐ கவனத்துக்குக் கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொண்டு சென்றுள்ளது. சேதமடைந்த கதவுகளுக்காக ரூ.5,000 தொகையைக் கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் அளித்துள்ளார் நிகெல் லாங்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள கர்நாடக கிரிக்கெட் சம்மேளனத்தில் செயலாளர் சுதாகர் ராவ், பெங்களூர் - சன்ரைசர்ஸ் போட்டியின்போது நோ பால் தொடர்பாக விராட் கோலி, உமேஷ் யாதவ், நடுவர் நிகெல் லாங் மூவருக்கு இடையே உரையாடல் நடந்தது. இதனால் அதிருப்தியடைந்த நிகெல் முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் அவரது அறைக்குத் திரும்பும்போது கதவுகளை வேகமாக உதைத்துள்ளார். இதனால் கதவுகள் சேதமடைந்தன. நல்லவேளையாகக் கண்ணாடிகள் எதுவும் உடையவில்லை. போட்டிக்குப் பின்னர் கதவுகள் சேதமடைந்து இருந்ததைக் கண்டேன். இதுதொடர்பாக அவரிடமும் பேசினேன். இது பிசிசிஐ நடத்தக்கூடிய தொடர் என்பதால் அவர்களிடம் தெரிவித்துள்ளோம். லாங் 5,000 ரூபாய் அளித்தார். அவர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளார் அதனால் அவரிடம் இந்த தொகையை வசூலித்தோம். இதுதொடர்பாக அவர் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை'' என்றார்.