`நான் கொஞ்சம் பிஸி; அதனால படிக்கல..' - வயது சர்ச்சைக்கு அஃப்ரிடி சொன்ன புது விளக்கம்! | The e-copy of my book is coming soon and in that, my real age will be revealed says Shahid Afridi

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (08/05/2019)

கடைசி தொடர்பு:17:23 (08/05/2019)

`நான் கொஞ்சம் பிஸி; அதனால படிக்கல..' - வயது சர்ச்சைக்கு அஃப்ரிடி சொன்ன புது விளக்கம்!

கடந்த 7-8 மாதங்களாக நான் கொஞ்சம் பிஸி எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷாகித் அப்ரிடி

சுயசரிதை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்காது. இதற்குப் பல பிரபலங்களின் சுயசரிதைப் புத்தகங்கள் சாட்சி. சுயசரிதை ஒருவர் தன்னைப் பற்றி தானே எழுதுவது அல்லது தன்னைப் பற்றிய தகவல்களைப் பிறருக்கு தெரிவித்து அவர் மூலம் எழுவது. குறைந்தபட்சம் அதில் இருக்கும் கருத்துகள் நாம் நம்பும் வகையில் அமைந்திருக்கும். ஆனால், தற்போது ஷாகித் அஃப்ரிடி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளதோ இதில் வேறு ரகம். ``கேம் சேஞ்சர் ஷாகித் அஃப்ரிடி'' என்ற பெயரில் சமீபத்தில் தனது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். `சர்ச்சைகளின் நாயகன்' என்பதற்கேற்ப சுயசரிதையிலும் பல்வேறு சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் முதன்மையானது அவரது வயதுதான். 

கேம் சேஞ்சர்

இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் அதிவேக சதமாகப் பதிவானது. இதில் விளையாடும்போது அவருக்கு வயது 16. ஆனால், அப்போது எனக்கு 16 வயது கிடையாது. அந்த சதத்தை 16 வயதில் அடிக்கவில்லை. அப்போது எனக்கு 19 வயது இருக்கும். நான் 1975-ல் பிறந்தேன். ஆனால், அதிகாரிகள் எனது வயதைத் தவறாக குறிப்பிட்டுள்ளனர் என இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் அஃப்ரிடி. புத்தகம் வெளியீடு தொடர்பான விழா ஒன்றில் பேசிய அவர், ``இதை நான் தெளிவுபடுத்துகிறேன். நான் எப்படி... என் வயது என்ன... என எல்லாவற்றையும் எனது ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் புத்தகம் எழுதும்போதுகூட எனது வயதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினேன்.

அப்ரிடி

இதனால் ரெக்கார்டுகளில் எனது பெயர் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. 1975-ல் பிறந்திருந்தால் 1996-ல் சதம் அடிக்கும்போது எனது வயது எப்படி 19ஆக இருந்திருக்க முடியும். 21 வயதாக அல்லவா இருக்க முடியும். சில தவறுகளால் அப்படிப் பதிவாகியுள்ளது. கடந்த 7-8 மாதங்களாக நான் கொஞ்சம் பிஸி. துபாய், தென்னாப்பிரிக்காவுக்கு அடிக்கடி சென்றதால் புத்தகத்தைச் சரியாகப் படிக்கவில்லை. இந்தியாவில் உள்ள அக்கறை கொண்ட மனிதர்கள் இந்த தவற்றை உணர்ந்துள்ளார்கள். என்னுடைய சுயசரிதைப் புத்தகத்தின் டிஜிட்டல் காப்பி விரைவில் வரும். அதில் என் உண்மையான வயது தெரியவரும்" எனக் கூறியுள்ளார். தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை அவரே படிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு வலைதளத்தில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க