`வெற்றிபெற 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள்!’ - பெண்களுக்கான மினி ஐபிஎல் சுவாரஸ்யம் #WIPL | Velocity wins a thrilling game against Trailblazers

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:08:32 (09/05/2019)

`வெற்றிபெற 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள்!’ - பெண்களுக்கான மினி ஐபிஎல் சுவாரஸ்யம் #WIPL

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கிய பெண்களுக்கான டி20 சாலஞ்சின் முதல் போட்டியில், ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான ட்ரெயில்ப்ளேசர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணியை வீழ்த்தியது. இந்த முறை, மூன்றாவதாக சேர்க்கப்பட்ட மித்தாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணி, ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது. வெற்றிபெறத் தேவையான 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த வெலோசிட்டி அணி, திக்குமுக்காடி வெற்றி பெற்றது #WIPL

#WIPL

டாஸ் வென்ற வெலோசிட்டி அணி கேப்டன் மித்தாலி ராஜ், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணிக்காக ஓப்பனிங் களமிறங்கிய ஸ்மிரிதி, சூஸி பேட்ஸ் இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிக்கா பாண்டே பந்துவீச்சில் ஸ்மிரிதி ஆட்டமிழக்க, ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணியின் ரன் குவிப்பில் வேகம் குறைந்தது. ஹர்லின் தியோல், சூசி பேட்ஸின் நிதானமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 112 ரன்கள் எடுத்தது, ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணி.

#WIPL

113 எடுத்தால் வெற்றி என்ற ரன் இலக்கை சேஸ் செய்த வெலோசிட்டி அணி வீராங்கனைகள், 15-வது ஓவரின் முடிவில் 108/2 எடுத்திருந்தனர். 24 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி. 17-வது ஓவரை வீசினார் ராஜேஷ்வரி கேக்வாட். களத்தில் இருந்தது முன்னணி பேட்ஸ்வுமன்களான மித்தாலி ராஜும், டேனியல் வையட்டும். முதல் மூன்று பந்துகளில் சிங்கிள்ஸ் தட்டினர். 18 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி. வெலோசிட்டி அணிக்கு வெற்றி நிச்சயம், போட்டியின் முடிவு இதுதான் என எண்ணி, ஹாட் ஸ்டாரை ஆஃப் செய்யப்போனபோது நடந்தது அந்தப் பரபரப்பு. ``ஜெயிக்குற அணிக்கும் மரண பயத்தைக் காட்டியே ஆகனும்" என்று ட்ரெயல்ப்ளேசர்ஸ் பெளலர்கள் முடிவெடுத்திருப்பார்களோ என்னமோ, அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள். 18-வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட டானியல் வையட் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி ரன் அவுட்டாக, வெலோசிட்டி அணி திணறத் தொடங்கியது.

#WIPL

18-வது ஓவரை வீசினார் தீப்தி ஷர்மா. முதல் பந்து க்ளீன் போல்டு. கேப்டன் மித்தாலி ராஜ் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது பந்து டாட் பால். மூன்றாவது பந்து ஸ்டம்ப்ஸில் பட்டுத்தெறிக்க, ஷிக்கா பாண்டே அவுட். வெலோசிட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை. அடுத்த பந்தும் டாட் பால். நான்காவது பந்தில் மற்றுமொரு விக்கெட். இந்த முறை அமிலியா கேர் க்ளீன் போல்டானார். ஒரு வழியாக ஐந்தாவது பந்தில் டபுள்ஸ் தட்டிவிட்ட சுஷ்ரி ப்ரதான், வெலோசிட்டியின் வெற்றியை உறுதிசெய்தார். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள். தீப்தி ஷர்மாவின் இந்த அதிரடி ஸ்பெல் வெலோசிட்டி அணியை திக்குமுக்காடச் செய்துவிட்டது. 2 ரன்களே தேவை என்றிருந்ததால் சுதாரித்துக்கொண்டு வெற்றியை உறுதிசெய்தது வெலோசிட்டி அணி. ட்ரெயல்ப்ளேசர்ஸ் அணியும், வெலோசிட்டி அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த சீரீஸின் கடைசிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், வெலோசிட்டியும் மோத உள்ளனர்.