`அஃப்ரிடி சொன்னது பாதிகூட இல்லை; இன்னும் எவ்வளவோ நடந்திருக்கு!' - மனம்திறக்கும் அக்தர் #GameChanger | Afridi Treated Harshly by Seniors: Shoaib Akhtar

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (09/05/2019)

கடைசி தொடர்பு:17:10 (09/05/2019)

`அஃப்ரிடி சொன்னது பாதிகூட இல்லை; இன்னும் எவ்வளவோ நடந்திருக்கு!' - மனம்திறக்கும் அக்தர் #GameChanger

அக்தர்

`தி கேம் சேஞ்ஜர்’ புத்தகத்தின் மூலம் கிரிக்கெட் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி. 16 வயதில் தான் அடித்த அதிவேக சதம். இந்திய வீரர் கம்பீருடனான மோதல், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தன்னிடம் நடந்துகொண்ட விதம் என நிறைய விஷயங்களை அதில் பகிர்ந்துள்ளார். சில வீரர்கள் அவமானப்படுத்தியதாகவும், அதனால் வேதனையடைந்தாகவும் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜாவித் மியான்தத் இந்தியாவுக்கு எதிராக 1999-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டிக்கு முன்பாக என்னை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கவில்லை எனக் குற்றச்சாட்டினார். இதுபோன்ற முன்னாள் வீரர்கள் குறித்து பலகுற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். சீனியர் வீரர்கள் தன்னை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாகவும் தான் விளையாடும் காலகட்டத்தில் இருவர் தன்னிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

அப்ரிடி 

``அஃப்ரிடியின் புதிய புத்தகத்தை நான் படித்தபோதும் அதுகுறித்து சிலர் பேசும்போதும் எனக்கு வெட்கமாக இருந்தது. ஒரு கிரிக்கெட்டர் தனது உண்மையான வயதை மறைத்து விளையாடிவிட்டு தற்போது நல்லவர்போல் வந்து மதிப்புமிக்க வீரர்கள் குறித்து விமர்சித்துப் பேசிவருகிறார். அஃப்ரிடி குறித்த பல கதைகள் என்னிடம் இருக்கின்றன. அவரது சுயநலத்துக்காக ஏராளமான கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அழித்துள்ளார்” என காட்டமாக் பேசியிருந்தார் பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத். 

இந்த நிலையில், அஃப்ரிடிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அக்தர்,``நான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் அஃப்ரிடிக்கு ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் எனக்கும் நிகழ்ந்துள்ளன. சீனியர் வீரர்கள் நிறைய தொல்லை அளித்தனர். அஃப்ரிடி, தனது புத்தகத்தில் மிகவும் குறைவாகத்தான் எழுதியுள்ளார். சீனியர் வீரர்களின் தொல்லைக்கு அஃப்ரிடி ஆளானார். நானே பலமுறை அதைக் கண்டுள்ளேன். ஆஸ்திரேலியா தொடரின்போது 4 சீனியர் வீரர்கள் என்னை அடிக்கும் நோக்கத்துடன் பேட்டுடன் என்னிடம் வந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.