லிவர்பூல் இப்போ பவர்ஃபுல்... 2005 சாம்பியன்ஸ் லீக் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா?! | How Liverpool defeated Milan in 2005 Champions League Final?

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:45 (10/05/2019)

லிவர்பூல் இப்போ பவர்ஃபுல்... 2005 சாம்பியன்ஸ் லீக் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா?!

லிவர்பூல் இப்போ பவர்ஃபுல்... 2005 சாம்பியன்ஸ் லீக் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா?!

மீண்டும் ஒருமுறை கால்பந்து உலகின் உச்சாணிக்கொம்பில் ஏறக் காத்திருக்கிறது, லிவர்பூல். 2005-ம் ஆண்டுக்குப் பிறகு லிவர்பூல் எந்தக் கோப்பையையும் வெல்லவில்லை. நடப்பு சீசனில் இரு கோப்பைகளை வெல்ல, லிவர்பூலுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ப்ரீமியர் லீக்கில் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளுடனும், லிவர்பூல் 94 புள்ளிகளுடனும் உள்ளன. ப்ரீமியர் லீக் மிஸ்ஸானாலும், சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பையை வெல்ல லிவர்பூலுக்கு வாய்ப்புள்ளது. 

லிவர்பூல்

2008-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இரு ப்ரீமியர் லீக் அணிகள் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் மீண்டும் சந்திக்கின்றன. மாட்ரிட்டில் ஜூன் 2-ம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில், லிவர்பூல் டாட்டன்ஹாம் ஸ்பர்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், வெற்றி பெற லிவர்பூலுக்கு அதிக வாய்ப்புள்ளது. எப்போதுமில்லாத அளவுக்கு பலம்வாய்ந்த அணியாக லிவர்பூல் தெரிகிறது. அரையிறுதி முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனாவிடம் மூன்று கோல்கள் வாங்கித் தோற்றது. பார்சிலோனாவில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ஒரு `அவே கோல்'கூட லிவர்பூல் அடிக்கவில்லை. 

இப்படிப்பட்டச் சூழலில், `இனிமேல் லிவர்பூல் அணிக்கு இறுதிப்போட்டிக்கான கதவு அடைக்கப்பட்டுவிட்டது' என்றே ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், ஆன்ஃபீல்டில் நடந்த இரண்டாவது லெக் ஆட்டத்தில் பார்சிலோனாவைக் கதறடித்து லிவர்பூல் வெற்றிபெற்றது. பார்சிலோனா போன்ற அணிக்கு எதிராக நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இத்தனைக்கும் ஒரே ஒரு அவே கோல் பார்சிலோனா அடித்திருந்தால்கூட, மெஸ்ஸி அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும். அதற்குக்கூட வாய்ப்பு கொடுக்காமல் லிவர்பூல், பார்சிலோனாவின் கோட்டையை முறியடித்தது, உண்மையிலேயே ரெட்ஸுக்கு சபாஷ் போடவைத்தது. ஆனால், செத்துச் செத்து ஜெயிப்பது ஒன்றும் லிவர்பூலுக்குப் புதிதல்ல. 

மிலன் அணி

ப்ரீமியர் லீக் அணிகளைப் பொறுத்தவரை, சாம்பியன்ஸ் லீ கோப்பையை ஐந்து முறை வென்ற ஒரே அணி லிவர்பூல்தான். கடைசியாக 2005-ம் ஆண்டு ஸ்டீவன் ஜெரார்டு தலைமையிலான லிவர்பூல் கிளப், சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. இஸ்தான்புல் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் அப்போதைய `பவர்ஹவுஸ்' ஏ.சி.மிலனை லிவர்பூல் சந்தித்தது. மால்டினி, திடா, ககா, செட்ரஃப், கட்டாஸோ,  பிர்லோ, செவ்சென்ஹோ, க்ரெஸ்போ, நெஸ்டா, காஃபூ, ஸ்டேம்ப். இது மிலனின் லைன் அப். 

இந்த அணியை யாரால் வீழ்த்த முடியும்? மால்டினியை மீறினாலும் கோல் கம்பத்தில் ஆறரை அடி திடா நிற்கிறார். ஆக, லிவர்பூல் கதை முடிந்தது என்பதே கணிப்பு. எதிர்பார்த்ததுபோலவே ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே லிவர்பூல் கோல் வாங்கியது. ஃப்ரீ கிக்கை எளிதில் கோலாக மாற்றினார் மால்டினி. அடுத்த இரு கோல்களையும் 39, 44-வது நிமிடத்தில் க்ரெஸ்போ திணித்தார். லிவர்பூல் க்ரஷ் ஆனது. முதல் பாதியில் மூன்று கோல்கள் வாங்கிய பிறகு, ஜெயிப்பது எல்லாம் சாதாரண காரியமா? 

பிற்பாதி தொடங்கியது. லிவர்பூல் ஆட்டத்தில் ஆக்ரோஷம் தெரிந்தது. 54 - வது நிமிடத்தில் ஜெரார்டின் புல்லட் வேக கோலால் திடா மிரண்டுபோனார். லிவர்பூலின் இரண்டாவது கோலை ஸ்மைசர் அடுத்த 2-வது நிமிடத்தில் அடித்தார். 60-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை எடுக்க வந்த ஜெரார்டை, கட்டாஸோ காலை இடறி கீழே விழவைத்தார். விளைவு, லிவர்பூலுக்கு பெனால்டி கிடைத்தது. சேபி அலான்ஸோ இந்த பெனால்டியை எடுத்தார். திடாவுக்கு வலதுபக்கமாக அலான்ஸோ அடிக்க, திடா தடுத்துவிட்டார். எனினும், ரீபவுண்டான பந்தை மீண்டும் கோலுக்குள் திணித்துத் தப்பித்தார் அலான்ஸோ. அரங்கத்தில் நிரம்பியிருந்த ரெட்ஸ் ரசிகர்கள், தங்களையே கிள்ளிப் பார்த்துக்கொண்டனர். 6 நிமிடத்தில் ஆட்டம் 3-3 என்ற கோல்கணக்கில் சமனுக்கு வந்துவிட்டது. 

liverpool

மிலனுக்கோ பெரிய சவாலாகப் போய்விட்டது. லிவர்பூல் டிஃபென்ஸை உடைக்க, கடுமையாகப் போராடியது. ஆனால், கடைசிக்கட்டத்தில் லிவர்பூல் தடுப்பாட்டத்தில் உயிரையே கொடுத்து நின்றது. எனினும், மிலன் அற்புத வாய்ப்புகளை உருவாக்கி வீணடித்தது. செவ்சென்கோ இரண்டு ஓப்பன் நெட் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டார். ஆட்டம் கூடுதல் நேரத்துக்குப் போய், டை பிரேக்கரில் வந்து நின்றது. 

பெனால்டியை நேர்த்தியாகக் கோலாக்கும் வீரர்கள் மிலனில் நிறைந்திருந்தனர், கோல் கம்பத்தில் திடா வேறு. டை- பிரேக்கரில் மிலன் எளிதாக வென்றுவிடும் என்பதே ரசிகர்கள் கணிப்பு. மீண்டும் ஒருமுறை கணிப்பைப் பொய்யாக்கியது லிவர்பூல். அதிர்ஷ்ட தேவதை வேறு அவர்கள் பக்கம் இருந்தாள். இல்லையென்றால், `பெனால்டி ஸ்பெஷலிஸ்ட் ' பிர்லோகூட பந்தை லிவர்பூல் கோல்கீப்பர் ஜெர்சி டியூடெக் கையில் அடிப்பாரா? இறுதியில், பெனால்டியில் லிவர்பூல் 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு, இன்று வரை லிவர்பூல் அணியால் சாம்பியன் ஆக முடியவில்லை.  இப்போது, ரெட்ஸுக்கான காலம் கனிந்து வந்துள்ளது. பழத்தைப் பறிக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்