`ஒருபோதும் அப்படி பேச மாட்டார்!'- கம்பீருக்கு ஹர்பஜன் சிங் சப்போர்ட் | I am shocked to note yesterday’s events involving Gautam Gambhir says harbhajan singh

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:06 (10/05/2019)

`ஒருபோதும் அப்படி பேச மாட்டார்!'- கம்பீருக்கு ஹர்பஜன் சிங் சப்போர்ட்

`கெளதம் கம்பீர் குறித்த குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது' என இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர்

கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சார்பில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிஷியை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த நோட்டீஸில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியையும் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவையும் இணைத்து தவறான தகவல் அச்சிடப்பட்டிருந்தது. கூடவே அதிஷியை தவறாக சித்திரித்தும் கருத்துகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வேதனை தெரிவித்த அதிஷி, ``கம்பீருக்கு ஒரேயொரு கேள்விதான். ஒரேயொரு பெண்ணுக்கு எதிராகக் கம்பீர் இப்படிச் செய்ய முடியும் என்றால், கிழக்கு டெல்லியில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் நிலைமை என்னவாகும். இந்த நோட்டீஸைப் படித்துப் பார்த்தபோது இடிந்துபோய் விட்டேன். இத்தகைய எண்ணங்கள் கொண்ட கம்பீர் வெற்றிபெற்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும்" எனக் கூறி செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கதறி அழுதார்.

அதிஷி

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கம்பீரோ, ``ஒரு பெண்ணின் அதுவும் உங்கள் சக பணியாளரின் தன்னடக்கத்தை மீறுகின்ற செயலைச் செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலை நான் வெறுக்கிறேன். இது அனைத்தும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக என்றால், நீங்கள் ஒரு இழிவானவர். உங்களின் அசுத்தமான மனதைச் சுத்தம் செய்ய ஒருவர் தேவைப்படுகிறார் என நினைக்கிறேன். கெஜ்ரிவால், அதிஷி உங்கள் இருவருக்கும் சவால் விடுக்கிறேன். நான் தான் இதைச் செய்தேன் என நீங்கள் நிரூபித்துவிட்டால் இப்போதே நான் தேர்தலில் இருந்து விலகிக்கொள்கிறேன். அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் அரசியலில் விலகிக்கொள்ளத் தயாரா? கெஜ்ரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஹர்பஜன் சிங்

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்பீருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``கம்பீர் குறித்து நேற்று வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் ஒருபோதும் எந்தப் பெண்கள் குறித்தும் தரக்குறைவாக பேச மாட்டார். அவர் வெற்றி பெறுகிறார் அல்லது தோல்வி அடைகிறார் அது வேறு விஷயம். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் கம்பீர்" எனக் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கம்பீர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க