`டெண்டுல்கர் இல்லாமல் எப்படி?' - சர்ச்சையும் அஃப்ரிடியின் வருத்தமும் | afiridi feels negative hype on GameChanger

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (10/05/2019)

கடைசி தொடர்பு:17:47 (10/05/2019)

`டெண்டுல்கர் இல்லாமல் எப்படி?' - சர்ச்சையும் அஃப்ரிடியின் வருத்தமும்

அப்ரிடி

‘தி கேம் சேஞ்ஜர்’ புத்தகத்தின் மூலம் சர்ச்சைகளுக்குள் சிக்கினார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி. இந்தப் புத்தகத்தில் கிரிக்கெட்டில் ஆல் டைம் பெஸ்ட் வேர்ல்டு xi என 11 வீரர்களின் பெயரை அறிவித்திருந்தார். இதில் தோனி மற்றும் சச்சின் பெயர்கள் இல்லை எனச் செய்திகள் வெளியாகின. அஃப்ரிடியின் பட்டியலில் சச்சினின் பெயர் இல்லாதது பலரையும் வியப்புக்குள்ளாகியது. தனது கேம் சேஞ்ஜர் புத்தகம் குறித்து தவறான தகவல்கள் வெளியாகிறது என ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அஃப்ரிடி. தனது ட்விட்டர் பதிவில், ``ஊடகங்களில் எனது கேம் சேஞ்ஜர் புத்தகம் குறித்து வரும் தகவல்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடைய சிறந்த 11 வீரர்களின் பட்டியல் இங்கே இருக்கிறது (பாகிஸ்தான், இந்தியா - பாகிஸ்தான், உலகின் சிறந்த xi) ஊடகங்களில் எனது பட்டியலில் சச்சின் இல்லை எனத் தெரிவித்திருந்தனர். அவர் எப்படி இல்லாமல் இருப்பார். அதற்கான ஆதாரங்கள் இங்கே இருக்கிறது”எனப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

புத்தகம்

உலகின் சிறந்த 11 பேர் பட்டியலில், சயீத் அன்வர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், இன்சமாம் உல் ஹக், காலிஸ், கில்கிறிஸ்ட், அஃப்ரிடி, வாசிம் அக்ரம், மெக்ராத், ஷேன் வார்னே ஆகியோரின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியல்தான் ஊடகங்களில் தவறாக வெளியாகியுள்ளது என ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

அப்ரிடி ட்வீட்

இந்தியா - பாகிஸ்தான் தொடர் குறித்துப் பேசியுள்ள அஃப்ரிடி, ``இருநாடுகளுக்கும் இடையே நிலவிவரும் பதற்றத்தை கிரிக்கெட் குறைக்கும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான தொடரின்போது அதிகப்படியான மக்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்கள். இந்தியாவுடனான அனைத்துத் தொடர்களையும் நான் விரும்பி விளையாடுவேன். பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு வீரர்கள் மீது அதிக மதிப்பு இருந்தது. அது ஓர் அற்புதமான உணர்வு. மீண்டும் இருநாடுகளுக்கு இடையே தொடர்கள் நடைபெறும் என நம்புகிறேன் எனப் பேசியுள்ளார்.