`தல'க்குக் கைகொடுத்த பூ; டாடிஸ் ஆர்மி vs கிட்ஸ் ஆர்மி! - #CSKvsDC டாஸ் சுவாரஸ்யங்கள் | IPL qualifier 2: CSK won the toss and choose to bowl first against DC

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (10/05/2019)

கடைசி தொடர்பு:19:34 (10/05/2019)

`தல'க்குக் கைகொடுத்த பூ; டாடிஸ் ஆர்மி vs கிட்ஸ் ஆர்மி! - #CSKvsDC டாஸ் சுவாரஸ்யங்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

#CSKvsDC டாஸ்

Photo: IPLT20.com

விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. குவாலிஃபையர் 1-ல் வெற்றிபெற்று மும்பை அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்த அணியை எதிர்க்கொள்ளும் அணியை இன்றைய போட்டி முடிவு செய்யும் என்பதால் ரசிகர்களின் பல்ஸை எகிறச் செய்திருக்கிறது. 

தோனி
Photo: IPLT20.com

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸின்போது தோனி காயினைச் சுண்டிவிடவே ஸ்ரேயாஸ் ஐயர் ஹெட்ஸ் கேட்டார்; ஆனால் விழுந்தது டெய்ல்ஸ். சி.எஸ்.கே-வில் ஒரே ஒரு மாற்றமாக முரளி விஜய்க்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ஸ்ரதுல் தாகூர் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

#CSKvsDC டாஸ்

Photo: IPLT20.com


டாஸின்போது, `டாட்ஸ் ஆர்மி (Dad's Army) vs கிட்ஸ் ஆர்மி (Kids Army) என்று இந்தப் போட்டி குறித்து மக்கள் பேசிக்கொள்கிறார்களே?. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்கவே, தோனி புன்முறுவலோடு அந்தக் கேள்வியை எதிர்க்கொண்டார். அதற்குப் பதிலளித்த தோனி, ``மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில், மக்கள் எந்தளவுக்கு அதிகமாகப் பேசுகிறார்களோ, அந்தளவுக்குப் போட்டியின்மீது எதிர்பார்ப்பை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். அது கிரிக்கெட்டுக்கு நல்லது. அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. அனுபவம் இருக்கும் அளவுக்கு வயதும் அதிகமாகத்தான் இருக்கும்'' என்றார்.