`இதுதான் வழக்கமான ரூட்; 2018 மட்டும் விதிவிலக்கு!' - ஐபிஎல் ஃபைனல் குறித்து தோனி #CSKVDC | chennai super kings enters ipl final 8th time

வெளியிடப்பட்ட நேரம்: 00:03 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:38 (13/05/2019)

`இதுதான் வழக்கமான ரூட்; 2018 மட்டும் விதிவிலக்கு!' - ஐபிஎல் ஃபைனல் குறித்து தோனி #CSKVDC

ஐபிஎல் தொடரின் பைனலில் 8வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்துள்ளது.

photo credit: @IPL

ஐபிஎல் சீசன் 12 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. குவாலிஃபையர் 1-ல் வெற்றிபெற்று மும்பை அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்த அணியை எதிர்க்கொள்ளும் அணியை இன்றைய போட்டி முடிவு செய்யும் என்பதால் ரசிகர்களின் பல்ஸை எகிறச் செய்திருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி, வழக்கம் போல ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஹர்பஜன், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அணிக்கு கைகொடுத்த அதேவேளையில்  பிராவோ, தீபக் சஹாரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். டெல்லி அணி தரப்பில் ரிசப் பான்ட் மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். 

photo credit: @IPL

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களான டூப்ளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவருமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க டெல்லி பௌலர்கள் எடுத்த முயற்சி 10 ஓவரில் தான் கைகொடுத்தது. அதற்கு டூப்ளசிஸ் தனது பங்கிற்கு 50 ரன்கள் எடுத்துவிட்டார். பௌல்ட் ஓவரில் டூப்ளசிஸ் அவுட் ஆக அடுத்த இரண்டு ஓவர்களிலேயே வாட்சனும் அரை சதம் கடந்த நிலையில் நடையை கட்டினார். அடுத்து வந்த ரெய்னா, மற்றும் தோனி சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அம்பதி ராயுடு 20 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

photo credit: @IPL

இதன்மூலம் 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இந்தாண்டும் டெல்லி அணியால் கோப்பையை கைப்பற்றும் கனவு பலிக்காமல் போனது. அதேநேரம் விளையாடிய 10 சீசனில் 8வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறையும் மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவிய சென்னை அணி இறுதிப் போட்டியில்  பழி வாங்கி கோப்பையை வெல்லுமா என்பது நாளை மறுநாள் தெரியவரும். 

photo credit: @IPL

போட்டிக்குப்பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, ``இதுதான் வழக்கமான ரூட். 2018 மட்டும் இதில் விதிவிலக்கு. வீரர்கள் புத்திசாலித்தனமாக விளையாண்டனர். 140க்கு மேலான டார்கெட்டை துரத்திய நிலையில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. ஆட்டம் 7.30 மணிக்கு எனும்போது இந்த பிட்ச் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கும். அப்படி இருந்தால் முதலில் அதிக ரன்களை அடிக்க முடியாது. அதனால் தான் பௌலிங்கை தேர்வு செய்தேன். அதேநேரம் பந்து நன்றாக திரும்பும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு இது ஏதுவாக இருக்கும். அதற்கேற்ப எங்களின் பௌலிங் யூனிட்டின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பௌலர்கள் புத்திசாலிதமானாக பந்துவீசினார்கள். சரியான லெந்த்தில் பந்துவீசி டெல்லி அணியை பெரிய ஸ்கோர் எடுக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதில் முக்கியம் எதிரணியின் ஒப்பனர்களை விரைவில் அவுட் ஆக்கியது தான். டெல்லி அணியின் பேட்டிங் லைன் அப் பலமாக இருந்தது. அதேபோல் அவர்களிடம் நிறைய இடக்கை ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வெளியேற்றுவதற்காகவே இடது கை ஸ்பின்னர்களை வைத்திருக்கிறோம்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க